"ஹை அலர்ட்" மோடில் அணு ஆயுதப் படைகள்! ரஷ்யா ராணுவம் அறிவிப்பு.. என்ன செய்யப் போகிறார் புதின்!
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் இன்னும் முழுவதுமாக அமைதி திரும்பாத நிலையில், ஆணு ஆயுதப்படை தொடர்பாக ரஷ்ய ராணுவம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை.
ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து, முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பிறகுத் தனது வீரர்களையும் அனுப்பியது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போர்
ஏனென்றால், ரஷ்யா அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு. இதனால் உக்ரைன் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாகப் பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் அதிபர் புதின் சொத்துகளை முடக்க ஒப்புதல் அளித்துள்ளது. இருந்தாலும் நிலைமை மேம்படவில்லை. ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

புதின் உத்தரவு
இந்தச் சூழலில் தான் பிப். 27, ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நாட்டின் அணு ஆயுத தடுப்பு படையினர் ஹைஅலர்ட் நிலையில் இருக்குமாறு தனது ராணுவ தளபதிகளுக்கு உத்தரவிட்டார். மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகச் சட்ட விரோத பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அதிபர் புதின், அணு ஆயுத தடுப்பு படையினருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தார். உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், புதினின் இந்த உத்தரவு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தயார் நிலை
இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்படி அதன் அணு ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல். வடக்கு மற்றும் பசிபிக் கடற்படைகள் போருக்குத் தயார் நிலையில் அணு ஆயுதப் படைகள் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரையில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதம், அணு ஆயுத நீர்மூழ்கி கப்பில், அணு ஆயுத ஏவுகணைகள் கொண்ட விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள்
ரஷ்ய ராணுவத்தின் இந்தச் செய்திக்கு மேற்குலக நாடுகள் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளன. அதேபோல ஐநாவின் அணுசக்தி கண்காணிப்புக்குழு அவசரக் கூட்டத்தை நடத்தியது. ஆணு ஆயுதப் படையைத் தயார் நிலையி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது "ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது" என்று நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் விமர்சித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக வெள்ளை மாளிகையும் சாடியுள்ளது.

அமைதி பேச்சுவார்த்தை
முன்னதாக அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்ளதாக ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. முதலில் பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்த உக்ரைன், வேறு ஐரோப்பிய நகரங்களில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவித்தது. இருப்பினும், இதற்கு ரஷ்யா மறுத்த நிலையில், கடைசியால் பெலராஸ் நாட்டிலேயே இன்று இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications