அமெரிக்காவில் எட்டாவது ஆண்டாக ஒரு குறளுக்கு ஒரு டாலர்’ பரிசுப் போட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்(யு.எஸ்): தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களை விட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழி மீது தீராத காதல் என்பது பல நிகழ்வுகள் மூலம் தெரிய வருகிறது.

ஒரு காலத்தில் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், உணர்வால் தமிழர்களாக வாழ்ந்து, பண்டிகைகள் உட்பட தமிழ் கலாச்சாரத்தை பேணிக்காத்து வந்தாலும், அடுத்தடுத்த தலை முறையினருக்கு தமிழ் மொழியை பேசுவதற்குக் கூட தெரிந்திருக்கவில்லை.

100 தமிழ்ப் பள்ளிகள்

100 தமிழ்ப் பள்ளிகள்

அமெரிக்காவில் வேலை நிமித்தமாக குடியேறிய தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து, தமிழ்ப் பள்ளிகள் நிறுவி பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுத் தருகிறார்கள். அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 100 தமிழ்ப் பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் 2 மணி நேரம் வரை நடைபெறும் இந்த வகுப்புகளில், ஆசிரியர் முதல் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் தன்னார்வத்துடன், எந்த ஊதியமும் இல்லாமல், நம் சக தமிழர்கள் பணியாற்றி வருவது மிகவும் போற்றத்தக்க வேண்டிய ஒன்றாகும்.

அடுத்த கட்டத்தை நோக்கி..

அடுத்த கட்டத்தை நோக்கி..

தமிழ்ப் பள்ளியை நிறுவிய பெரும்பாலானோர், பிள்ளைகள் தமிழ் மொழியில் பேசவேண்டும், தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற தலையாய நோக்கத்திலேயே தொடங்கினார்கள். காலம் செல்லச் செல்ல, நோக்கங்களும் செயல் திட்டங்களும் விரிவடையத் தொடங்கின.

பாடத் திட்டங்களின் தரத்தை தமிழகம், சிங்கப்பூருக்கு நிகராக உயர்த்தினர். இதனால், அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, தமிழகப் பள்ளியில் தமிழ்ப் பாடம் தொடர்வது எளிதானது.

அமெரிக்கன் தமிழ் அகடமி, கலிஃபோர்னியா தமிழ் அகடமி என்ற இரு அமைப்புகளின் பாடத் திட்டங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பின்பற்றப்படுகின்றன. இது அமெரிக்காவிலேயே ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு மாற்றலாகிப் போகும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, உள்ளூர் தமிழ்ப் பள்ளியில் தொடர்வதற்கு பெரும் வசதியாக இருக்கிறது.

இலக்கியங்களும் நீதி நூல்களும் வேண்டாமா?

இலக்கியங்களும் நீதி நூல்களும் வேண்டாமா?

பிள்ளைகள் தமிழ் மொழியில் எழுதப் பேச படித்தால் மட்டும் போதுமா? அரிய தமிழ் பொக்கிஷங்களையும் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று எழுந்த கேள்விகளுக்கு, பதிலாக திருக்குறள் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்த ஆரம்பித்துள்ளனர். பதினான்கு வருடங்களுக்கு முன்னர் டல்லாஸ் மாநகரில் தொடங்கப்பட்ட ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில், எட்டாண்டுகளுக்கு முன்னதாக முதன் முதலில் திருக்குறள் போட்டியை நடத்தினர்.

குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்காக, 'ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசு' வழங்க ஆரம்பித்தனர். தொடர்ந்து நடந்து வந்த இந்த போட்டி எட்டாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதே முறையை பின்பற்றி 'ஒரு குறள் ஒரு டாலர் பரிசுப் போட்டி' அமெரிக்காவின் ஏனைய நகரங்களிலும் தற்போது பிரபலமாகியுள்ளது.

4 வயது சண்முகம் 40 : 11 வயது நந்தினி 333

4 வயது சண்முகம் 40 : 11 வயது நந்தினி 333

இந்த ஆண்டு டல்லாஸ் நகரில் நடந்த போட்டியில் 11 வயது நந்தினி 333 குறள்களை முழு அர்த்தத்தடன் கூறி முதல் பரிசை வென்றார். 4 வயது சண்முகவ் 40 குறள்களை ஒப்பித்து மழலைப் பிரிவில் முதல் பரிசு பெற்றார். பிரணவ் மூன்றாம் நிலையிலும், அபிராமி முதலாம் நிலையிலும் முதல் பரிசை வென்றனர். மொத்தம் 135 குழந்தைகள் 3200 தடவைகள் குறள்களை ஒப்புவித்தனர். கோப்பல் தமிழ்ப் பள்ளி, கொங்கு தமிழ்ப் பள்ளி, DFW வித்யா விகாஸ் தமிழ்ப்பள்ளி, பாலதத்தா தமிழ்ப் பள்ளி, அவ்வை தமிழ்ப் பள்ளி மற்றும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். பெரியவர்களுக்கான போட்டியில் சங்கீதா வெற்றி பெற்றார்.

அவ்வை அமுதம்

அவ்வை அமுதம்

அவ்வை அமுதம் பிரிவில் ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் மற்றும் மூதுரை என நான்கு போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 120 குழந்தைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர் வெவ்வேறு நிலைகளுக்கான 12 முதல் பரிசுகளை சீதா, ஆதனா, லக்‌ஷயா, கீயா, அபினவ், சஹானா, சண்முகவ்(மழலை), ப்ரக்ருதி, காவ்யா, ஷன்மதி, நித்யா, நந்தினி ஆகியோர் பெற்றனர். இவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முதல் பரிசுகள் பெற்றவர்கள்.

தொலைக்காட்சி பார்க்காதே

தொலைக்காட்சி பார்க்காதே

தமிழில் சுயமாக எழுதும் எழுத்தாற்றலையும், சரளமாக பேசும் பேச்சாற்றலையும் வளர்ப்பதற்காக பேச்சுப் போட்டியும் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றன. குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்று கல்வியின் பயன், அவ்வை சொல்லும் நற்குணங்கள், பருவத்தே பயிர் செய் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளை எழுதினர். இன்றைக்கு அவ்வையார் இருந்திருந்தால் 'தொலைக்காட்சி பார்க்காதே' என்று புது ஆத்திச்சூடி எழுதியிருப்பார் என்று சிறுவன் ஒருவன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது ஹை லைட்டாகும். முதல் பரிசுகளை லஷ்யா, சீதா, அஜய் மற்றும் பெரியவர் பிரிவில் தீபா ஆகியோர் பெற்றனர்

சினம் காக்க அறிவுறுத்திய சீதா

சினம் காக்க அறிவுறுத்திய சீதா

அவ்வையும் அறமும், அவ்வையார், திருவள்ளுவர் பார்வையில் செய் நன்றி, திருவள்ளுவர் கூறும் சினம் காக்க, ஆகிய தலைப்புகளில் குழந்தைகள் கம்பீரமாக நின்று பேசிய பேச்சாற்றல் வியக்க வைத்தது. பத்தாவது படிக்கும் சீதா, சினம் காக்க என்ற தலைப்பில் பேசிய போது, இது அமெரிக்காவில் பிறந்த குழந்தை தானா! என்ற ஆச்சரியம் உண்டானது. கட்டுரைப் போட்டியில் 14 மற்றும் பேச்சுப் போட்டியில் 17 குழந்தைகள் பங்கேற்றனர். தமிழ்த் திறன் போட்டிகளை பழனிசாமி நடத்தித் தந்தார். சீதா, லஷ்யா, நந்தினி பரிசுகளை தட்டிச் சென்றனர்.

சிங்கப்பூர் போலாகுமா அமெரிக்கா?

சிங்கப்பூர் போலாகுமா அமெரிக்கா?

வெவ்வேறு போட்டிகளில் நடுவர்களாக ஏராளமானோர் பங்கேற்றனர். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த திருமதி. உமா மணி, திருக்குறள் போட்டி நடுவராக பங்கேற்றிருந்தார். அவர் கூறுகையில், சிங்கப்பூரில் அரசுப் பள்ளிகளிலேயே தமிழ் கற்றுத் தருகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் தன்னார்வத்துடன் தமிழர்களே தமிழ்ப்பள்ளி நடத்திவருவதோடு இத்தகைய போட்டிகளும் நடத்தி வருவதால், சிங்கப்பூர் போல் அமெரிக்காவிலும் தமிழ் மொழி சிறப்பாக வளர்ந்து செழித்தோங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ் ஆராதனை விழா

தமிழ் ஆராதனை விழா

மாலையில் நடைபெற்ற தமிழ் ஆராதனை விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. பாரதியார் பாடல்களுக்கு, வெவ்வேறு தமிழ்ப் பள்ளிகளிலிருந்தும் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. நடனங்களை புவனா அருண் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

அனைத்து திருக்குறள் போட்டியாளர்களுக்கும் வழக்கம்போல் 'ஒரு குறளுக்கு ஒரு டாலர்' பரிசும் வழங்கப்பட்டன. தாய்மொழி நாளில் அந்நிய மண்ணில் நடந்த இந்த விழா, தமிழ் மொழியை ஆராதிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.

உமையாள் முத்து

உமையாள் முத்து

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையும் தென்றல் மாத இதழும் இணைந்து, திருமதி உமையாள் முத்துவை கவிரவித்தனர். தனது 16 வயது முதல், உலகம் முழுவதும் 6000 மேடைகளுக்கும் மேல் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர் உமையாள் முத்து.

அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

அமெரிக்காவில் 14 ஆண்டுகளாக, 80 பக்கங்களுடன் வெளியாகி வரும் தென்றல் தமிழ் மாத இதழ், முழுக்க முழுக்க அங்கே இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படித்தால் பிழைப்பு உண்டு!

தமிழ் படித்தால் பிழைப்பு உண்டு!

ஏற்புரை ஆற்றிய உமையாள் முத்து, 'ஒரு குறளுக்கு ஒரு டாலர் வழங்குவதன் மூலம் 'தமிழ்ப் படித்தால் பிழைப்பு இல்லை' என்று தமிழர்களிடம் உள்ள தவறான எண்ணத்தை தகர்த்துள்ளீர்கள். இந்த ஒவ்வொரு டாலரும் தமிழ்ப் படித்தால் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு உண்டாக்கும். இந்த குழந்தைகள் சம்பாதித்துள்ள முதல் வருமானம், திருக்குறள் மூலம் கிடைத்துள்ளது என்பதே தமிழுக்கு பெருமை சேர்க்கிறது என்றார்.

திருக்குறள் மொழியில் பேசலாமே!

திருக்குறள் மொழியில் பேசலாமே!

திருக்குறள் அதிகாரங்களின் எண்களைக் கொண்டு திருக்குறள் மொழியில் எப்படி பேசுவது என்றும் விளக்கமளித்தார். சுப்பிரமணிய தாஸ் என்ற திருக்குறள் அவதானி ஒருவர் கி.ஆ.பெ வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளார். கி.ஆ.பெ தன் மகளிடம், இன்றைக்கு நம் வீட்டில் 9 உண்டா என்று கேட்கிறார். அதாவது 'விருந்து‘ உண்டா என்ற அர்த்தமாகும்.

வந்தவரோ, அம்மா நான் 95 ல் இருக்கிறேன் அதனால் ஒன்றும் வேண்டாம். அதாவது நான் ‘மருந்து' சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். அதனால் விருந்து ஏதும் வேண்டாம் என்கிறார். இப்படி திருக்குறள் அதிகார எண்களைக் கொண்டு புதிதாக ஒரு மொழியையே குடும்பத்திற்குள் உருவாக்கலாம் என்றார்.

தன்னார்வத் தொண்டர்கள்

தன்னார்வத் தொண்டர்கள்

விழா நிகழ்ச்சியை ஜெய்சங்கர் மற்றும் பழனிசாமி தொகுத்து வழங்கினர். திருக்குறள் போட்டிக்கு வெங்கடேஷ் தலைமையேற்று நடத்தினார், அண்ணாமலை ஆராதனை விழா ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.

அருண்குமார், விஜயகுமார், வெங்கடேசன் மற்றும் தலைமையில் பல்வேறு குழுக்களாக தன்னார்வ தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஒருங்கிணைப்பாளர்களுக்கு உறுதுணையாக டாக்டர் ராஜ் வழி நடத்தினார். தகவல் ஒருங்கிணைப்பை இர தினகர் செய்தார்.

விசாலாட்சி வேலு நன்றியுரை கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
8th Thirukkural competion for various age groups was held at Dallas and conducted by Sastha Foundation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற