தைவான்.. "நெருப்போடு விளையாடாதீர்கள்.." அமெரிக்க அதிபருக்கு போனில் கடும் வார்னிங் கொடுத்த சீன அதிபர்
பீஜிங்: தைவான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, 'நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். அமெரிக்கா இதை தெளிவாக புரிந்து கொள்ளும் என நம்புகிறோம்' என சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் காரணமாக சீனாவில் இருந்து பிரிந்து தைவான் தனி நாடாக உருவானது. எனினும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
இதேபோல், தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்றுவதற்கு படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என சீனா கூறி வருகிறது.

தைவான் விவகாரம்
இதுமட்டுமின்றி தைவானின் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் சீன போர் விமானங்கள் அந்நாட்டிடம் சீண்டலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதே நேரத்தில், தைவான் இறையாண்மையை காப்பதற்கு நாங்கள் உறுதியுடன் துணை நிற்போம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக இவ்விவகாரத்தால் அமெரிக்கா - சீனா இடையே அடிக்கடி வார்த்தை போரும் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கைப்பற்ற முயற்சிப்பது போல தைவானை கைப்பற்ற சீனா முனைப்பு காட்டலாம் என்று தைவான் அரசு தெரிவித்து வருகிறது.

நெருப்புடன் விளையாடாதீர்கள்
தைவான் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் அமெரிக்கா-சீனா இடையே முட்டல் மோதல்கள் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த உரையாடலின் போது, பல்வேறு முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசியிருக்கின்றனர். குறிப்பாக தைவான் விவகாரத்தில், ஜோ பைடனுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்த ஜின்பிங் "நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். அமெரிக்கா இதை தெளிவாக புரிந்து கொள்ளும் என நம்புகிறோம்" எனப் பேசியதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜின்பிங் திட்டவட்டம்
ஜோ பைடன் - ஜின்பிங் இடையே நடைபெறும் 5-வது தொலைபேசி உரையாடல் இதுவாகும். இந்த உரையாடலின் பொருளாதார வளர்ச்சி, அரசியல் விவகாரங்கள் என பல தரப்பு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டனர். குறிப்பாக அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் நான்சி பெலோசி தைவான் செல்ல இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து தனது அதிருப்தியை ஜி ஜின்பிங் வெளிக்காட்டியிருக்கிறார். ஒரே சீனா என்ற கொள்கைக்கு அமெரிக்கா கட்டுப்பட வேண்டும் என்றும் தைவானின் சுதந்திரம் மற்றும் வெளிநாடுகளின் தலையீடு எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜின்பிங் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

வெள்ளை மாளிகை தகவல்
இரு நாடுகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு துறைகளில் அமெரிக்கா, சீனா இடையேயான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கு மட்டும் இன்றி உலக அளவில் நன்மை பயக்கும் என்று ஜோ பைடன் இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டு இருக்கிறார். அதேவேளையில், தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை. என்றும் தெரிவித்துள்ளார். தைவான் விவகாரத்தில் தன்னிச்சையான முயற்சிகளை அமெரிக்கா ஒருபோதும் ஏற்காது. அதை கடுமையாக எதிர்க்கும் என ஜோ பைடன், ஜின்பிங் உடனான உரையாடலின் போது குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பலமடங்கு வலிமை
மேலும், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக் கொண்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கடைசியாக 1997 ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் அமெரிக்கா சீனாவை விட மிக வலுவாக இருந்ததால், அப்போது அமெரிக்கா கையே ஓங்கியிருந்தது. ஆனால், தற்போது நிலைமையே வேறு. சீனா பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியிலும் பல மடங்கு வலிமை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications