தோண்ட தோண்ட பிணங்கள்.. 20 ஆயிரத்தை நெருங்கும் துருக்கி, சிரியா நிலநடுக்க பலி! பலரது நிலை கவலைக்கிடம்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 ஐ தாண்டியுள்ளது.
அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கை 20,000 ஐ தாண்டும் என்று அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த 6 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அதிகாலை ஏற்படத் தொடங்கிய நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19,000 ஐ தாண்டி இருக்கிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் படையினர் தொடர் நில அதிர்வுகளுக்கு மத்தியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களை பன்னாட்டு குழுவினர் உதவியுடன் மீட்டு வருகின்றனர்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் துருக்கியிலும், அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியிலும் இடிந்து விழுந்தன. அடுத்து 2 வது நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டதால் பாதிப்பு இன்னும் மோசமடைந்தது.

சிதைந்த நகரங்கள்
6 என்ற ரிக்டர் அளவில் 3 வது நிலநடுக்கம் பதிவாகி அடுத்தடுத்து பேரழிவுகள் ஏற்பட்டன. நிலநடுக்கங்களின் தொடர்ச்சியாக பல முறை ஆப்டர் ஷாக் எனப்படும் நில அதிர்வுகளும் துருக்கியில் ஏற்பட்டு உள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. நிலநடுக்கத்தால் வெடிப்பு ஏற்பட்ட கட்டிடங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக இடிந்து விழுந்தன.

அதிகமாகும் உயிரிழப்பு
அண்டை நாடுகளான ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் இடிந்தும், உருக்குலைந்த நிலையிலும் துருக்கி மற்றும் சிரியாவின் நகரங்கள் காணப்படுகின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 19,300 ஆக அதிகரித்து இருக்கிறது.

துருக்கியில் 16,000 பேர் உயிரிழப்பு
நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 19 ஆயிரம் பேரில் 16,170 பேர் துருக்கியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 3,162 பேர் சிரியாவில் இதுவரை நிலநடுக்கத்தால் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications