'தாலிபான்கள் இனியும் எங்களுக்கு எதிரி இல்லை..' ரஷ்யாவின் திடீர் மனமாற்றம்.. பின்னணி என்ன? பரபர தகவல்
மாஸ்கோ: ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்குள்ள தூதர்களை பல்வேறு நாடுகளும் திரும்பப் பெற்று வரும் நிலையில், ரஷ்யா மட்டும் இதற்கு நேர் எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கனில் அமெரிக்கப் படைகள் இருந்தன. இதனால் அந்த காலகட்டத்தில் தாலிபான்கள் ஆதிக்கம் பெரியளவில் ஆப்கானிஸ்தானில் இல்லாமல் இருந்தது.
இருப்பினும், அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருந்து கிளம்பத் தொடங்கியதுமே, தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீதான தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். வெறும் குறுகிய காலத்திலேயே பல முக்கிய பகுதிகளைக் கைப்பற்றினர்.

தாலிபான்கள்
கடந்த சில நாட்களாகவே, அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவிய நிலையில், நேற்று தாலிபான்கள் ஆப்கன் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கானி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தாலிபான்களின் செயல்களைக் கண்டித்து வருகிறது. அதேபோல அங்குள்ள தூதர்கள் உள்ளிட்டோரை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

ரஷ்யா நிலைப்பாடு
பல நாடுகளும், தாலிபான்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரஷ்யா இதற்கு நேர்மாறாக ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ரஷ்யா எடுத்துள்ளது. கடந்த 1980களில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகவும் தாலிபான்கள் செயல்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது அந்த முடிவை எடுத்துள்ளது.

ஆதரவு
மத்திய ஆசியப் பகுதியில் ரஷ்யா பல ராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. எனவே, தான் வலுவாக உள்ள பிராந்தியத்தில் தனது நலன்களைப் பாதுகாக்கவும் உறுதியற்ற தன்மை ஏற்படுவதைத் தடுக்கவே ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த திங்கள்கிழமை ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்கூட ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைமை சீராகி வருவதாகவும் தாலிபான்கள் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலம்
அதேபோல ரஷ்யா நாட்டுத் தூதரையும் சந்திக்கத் தாலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள ரஷ்யா தூதரகத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் தாலிபான்கள் ரஷ்யா தூதரகத்தைப் பாதுகாக்கும் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இது கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுக்கு நேர்மாறாக உள்ளது. கடந்த 1992இல் தாலிபான்கள் தங்கள் ஆதிக்கத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ரஷ்யா தனது தூதர்களை அழைத்து வருவதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த முடிவு
ரஷ்யா ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது குறித்துப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகையில், "தான் வலுவாக உள்ள மத்திய ஆசியப் பகுதியில் மோதல் மற்றும் பயங்கரவாதம் அதிகரிப்பதை ரஷ்யா விரும்பவில்லை. அதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளது. மத்திய ஆசியப் பிராந்தியத்தில் அமைதியான சூழல் ஏற்பட வேண்டும் என்றால், தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இதை ரஷ்யாவும் உணர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்து என்ன
இதனால், ஆப்கானில் ஆட்சி அமைத்துள்ள தாலிபான்களுடன் சுமுகமான ஒரு உறவு தொடர வேண்டும் என்றே ரஷ்யா விரும்புகிறது. ஆனால் அதேநேரம் தாலிபான் அரசுடன் விரைவாக ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் ரஷ்யா விரும்பவில்லை என்றும் தாலிபான் அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதை சில காலம் கண்காணித்த பிறகே அடுத்தகட்ட நகர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஏன் இந்த திடீர் மாற்றம்
ரஷ்யாவும் தாலிபான்களும் திடீரென ஒன்றும் நெருக்கம் காட்டவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே தாலிபான்களுடன் ரஷ்யா தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆப்கன் பகுதியில் தாலிபான்கள் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியை உருவெடுத்துள்ளதாகக் கடந்த மாதம் ரஷ்ய வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது. 1990களில் இருந்த அல் கொய்தா ஆதரவுடன் இருந்த தாலிபான்களும் இப்போது இருக்கும் தாலிபான்களும் பல வேறுபாடுகள் உள்ளதாகவும் இதனாலேயே கடந்த கால கசப்புகளை மறந்து தாலிபான்களை ஆதரிப்பதாகவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கியிருந்த நிலையில், மறுபுறம் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ரஷ்யா மோதல் போக்கைக் கொண்டிருந்தது. ஆப்கன் எல்லைப் பகுதிகளில் தனது ராணுவத்தை வலுப்படுத்த ரஷ்யா விரும்புகிறது. ரஷ்யாவும் தாலிபான்களும் பரஸ்பரம் இணைந்து செயல்பட தற்போது ஒப்புக்கொண்டாலும்கூட, அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றே பாதுகாப்பு வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். ஆப்கனின் மற்ற அண்டை நாடுகளான உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் தாலிபான்களுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் தஜிகிஸ்தான் இதுவரை அதுபோல எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications