"பெரிய கொடுமை.." உணவு, நீர் இல்லாமல் 3,000 கி.மீ. கப்பலின் "அடியில் " பயணித்த 3 அகதிகள்! கடைசியில்..
மேட்ரிட்: ஆப்பிரிக்காவில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த 3 பேர், ஸ்பெயினுக்கு அகதிகளாக தப்பிச் செல்வதற்காக ஒரு கப்பலின் அடியில் உள்ள சிறு கம்பியின் மீது அமர்ந்து ஆபத்தான முறையில் சென்றுள்ளனர்.
சுமார் 3,200 கி.மீ. தூரத்துக்கு 11 நாட்களுக்கும் மேலாக ஒரு பருக்கை உணவும், ஒரு சொட்டு தண்ணீரும் இல்லாமல் அவர்கள் பயணித்துள்ளனர்.
மிகவும் பயங்கரமான இந்த பயணத்தின் போது, அவர்கள் எதிர்கொண்ட ஆபத்துகள் குறித்து கேட்டால் நாம் அச்சத்தில் உறைந்துவிடுவோம். அந்த திகில் பயணம் பற்றி இங்கு பார்ப்போம்.

வரலாறு காணாத பஞ்சம்
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே இதுவரை சந்த்தித்திராத பெரும் பஞ்சத்தில் ஆப்பிரிக்கா சிக்கித் தவித்து வருகிறது. குறிப்பாக, நைஜீரியா, எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா, ஜிபெளடி உள்ளிட்ட நாடுகளில் வறட்சி தலைவரித்தாடி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் இந்த வறட்சிக்கு பலியாகியுள்ளனர். இதனால் இந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் பலர், வெவ்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இவர்களை பல நாடுகள் மனிதாபிமானமே இல்லாமல் திருப்பி அனுப்பி வருவது வேறு கதை.

கால்களுக்கு கீழே கடல்
இதனிடையே, கடந்த மாதம் 18-ம் தேதி ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேனரி தீவுக்கு ஒரு பெரிய எண்ணெய் சரக்குக் கப்பல் நைஜீரியாவில் இருந்து புறப்பட்டது. அப்போது நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் யாருக்கும் தெரியாமல், அந்த சரக்குக் கப்பலின் அடிப்பகுதியில் இருக்கும் ஒரு இரும்புத் தகட்டில் அமர்ந்து கொண்டனர். சரியாக 3 பேர் மட்டுமே அமர முடியும் என்பதால் மற்றவர்கள் அதில் ஏறவில்லை. அதாவது அந்த தகட்டில் அமர்ந்தால் கடல் நீர் கால்களை உரசும். தலையை லேசாக உயர்த்தினாலே கப்பல் தலையில் இடிக்கும்.

11 நாட்களாக சாப்பாடு இல்லாமல்..
இங்கிருந்து பஞ்சத்தால் உயிர் போவதை விட, உயிரை அடமானம் வைத்து சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். கப்பலும் புறப்பட்டது. ஆனால், கப்பலில் ஒரு பகுதியில் இந்த 3 பேர் வருகிறார்கள் என்பது கப்பலில் இருக்கும் யாருக்கும் தெரியாது. இவ்வாறு சுமார் 11 நாட்களாக ஆர்ப்பரிக்கும் கடலின் சில இன்ச்சுகளுக்கு மேலே அவர்கள் பயணித்துள்ளனர். அதுமட்டுமல்லமல், இத்தனை நாட்களும் அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது. இதனால் பசி மயக்கத்திலும், கடுங்குளிரிலும் அவர்கள் பயணித்திருக்கினர்.

பசி மயக்கமும் துரத்திய சுறாக்களும்..
இவ்வாறு மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட அவர்கள் கடந்த 30-ம் தேதி கேனஸ் தீவை சென்றடைந்தனர். ஆனால், இத்தனை நாட்கள் எதுவும் சாப்பிடாததாலும், கடும் குளிரில் பயணித்ததாலும் அவர்கள் பிரம்மை பிடித்தது போல் இருந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது அவர்களின் உடல்நிலை ஓரளவுக்கு தேறி வருவதாக கூறப்படுகிறது. தங்களின் இந்த பயணத்தின்போது பசி மயக்கத்தில் கடலுக்குள் பல முறை அவர் விழ இருந்ததாகவும், ஆனால் ஒருவரையொருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டதால் அப்படி நிகழாமல் இருந்ததாகவும் அவர்கள் கூறினர். மேலும், 3 முறை சுறா மீன்கள் இவர்களை பிடிக்க துரத்தியதாகவும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications