இந்தியாவை உலுக்கிய தமிழ் குரல்..உணர்ச்சி + நெகிழ்ச்சி.. வாவ்.. வரலாற்று சிறப்புமிக்க தருணம்!
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஒட்டு மொத்த இந்திய விளையாட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல் வர்ணனை செய்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி பெண் வர்ணனையாளர்களையும் ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்துள்ளது இந்த வெற்றி.
மிகவும் வலிமையான அணியாக அறியப்படும் ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் அணியால் வீழ்த்த முடியுமா என்று இந்த போட்டிக்கு முன்பாக பல கேள்விகள் எழுந்தன.
அத்தனையையும் நமது மகளிர் அணி அடித்து, தூள் தூளாக்கி காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலிய அணியை 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதித்தது.

ஆடவர் ஹாக்கி அணி
அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அர்ஜென்டினாவை சந்திக்கவுள்ளது. இதேபோல ஆடவர் ஹாக்கி அணி 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதிக்கு சென்று உள்ளதன் மூலமாக 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை தருகிறது இந்திய ஆடவர் ஹாக்கி.

டிரெண்டான ஹாக்கி
அடுத்தடுத்து ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணி பெற்றுவரும் இந்த வெற்றி, இந்திய விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றிருக்கிறது. கிரிக்கெட் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த பல ரசிகர்களும் கூட கடந்த சில நாட்களாக ஹாக்கி பற்றி சமூக வலைத்தளங்களில் சிலாகிப்பதை பார்க்க முடிகிறது.

சோனி டிவி
இது வெறுமனே ரசிகர்களுடன் நின்றுவிடவில்லை. ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நேரலையாக ஒளிபரப்பு செய்யும் சோனி தொலைக்காட்சியின் வர்ணனையாளர்களையும் இந்த உற்சாகமும், நெகிழ்ச்சியும் தொற்றிக் கொண்டிருக்கிறது. ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்றதை பார்த்து, வார்த்தைகள் உடைந்துபோய் கண்கள் கலங்கி போய் ஹிந்தி வர்ணனையாளர்கள் பேசிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

தமிழ் வர்ணனையாளர்கள்
இன்றும் இப்படி ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இதில் தமிழ் வர்ணனையாளர்கள் மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை உற்சாகமாக பேசிக் கொண்டாடுவதை பார்க்க முடிகிறது . வர்ணனையாளர்களுக்கான அறையில் வர்ணனையாளர்கள் குதிப்பது, இந்தியாவுக்கு வெற்றி என்று அவர்கள் உணர்ச்சி தழுதழுக்க கத்திக்கொண்டே வர்ணனை செய்வது, கைகளால் கண்களை மூடிக்கொண்டு உணர்ச்சிவசப்படுவது என அத்தனை காட்சிகளும் வீடியோ பதிவாகி தற்போது வெளியாகியுள்ளன.

உருகிய வர்ணனையாளர்கள்
பொதுவாக எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் நேரலை வர்ணனையாளர்கள் அந்த விளையாட்டின் வீரியத்தை ரசிகர்களுக்கு கடத்த கூடியவர்கள். ஆனால் அவர்கள் உணர்ச்சிவசப்படுவது கிடையாது. ஒரு சில சமயங்களில் தான் இப்படி நடைபெறும். ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை மகளிர் மற்றும் ஆடவர் ஹாக்கி அணி பதிவு செய்து இருப்பதன் காரணமாக வர்ணனையாளர்களுக்கு கூட தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் அடுத்தடுத்த இந்த வீடியோக்கள் காண்பிக்கின்றன.

நாட்டை உலுக்கிய குரல்
தமிழ் வர்ணனையாளர்கள் வீடியோ என்ற போதிலும் கூட, ஹிந்தி பேசும் வட இந்திய விளையாட்டு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வகையில், இந்த தமிழ்குரல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது என்றுதான் கூற வேண்டும். உணர்ச்சிகளுக்கு மொழி ஏது?












Click it and Unblock the Notifications