
திரும்பி போங்க..அதிகரிக்கும் வெறுப்புணர்வு! அகதிகளை சிரியாவுக்கே அனுப்பும் துருக்கி! எர்டோகன் அதிரடி
இஸ்தான்புல் : துருக்கியில் வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளுக்கு எதிராக துருக்கி மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் அவர்களை மீண்டும் சிரியாவுக்கே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் அண்டை நாடான சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து ஆளும் அரசுக்கு எதிராக கிளர்ச்சி படைகள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆதிக்கம் அதிகரித்ததோடு உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.
போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்த நிலையில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புக தொடங்கினர்.

சிரியா போர்
கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷ்யா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து சிரியாவில் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புக தொடங்கினர். குறிப்பாக சிரியாவின் அண்டை நாடான துருக்கியில் சுமார் 50 லட்சம் மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

அகதிகள் தஞ்சம்
சிரியாவின் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்தது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்ட நிலையில், 2020 ஆண்டிலேயே போர் முடிவுக்கு வந்தது. ஆனால் சிரியா அகதிகள் நாடு திரும்பாமல் துருக்கி உள்ளிட்ட நாடுகளிலேயே தங்கி விட்டனர்.

மக்களிடையே மோதல்
தற்போது துருக்கி நாட்டில் சிரியா நாட்டைச் சேர்ந்த ஏறக்குறைய 40 லட்சம் அகதிகள் வசித்து வரும் நேரத்தில், சிரிய அகதிகளால் துருக்கி நாட்டின் பொருளாதாரம், பண்பாடு, மொழி, பழக்கவழக்கம் உள்ளிட்ட பாரம்பரிய செயல்பாடுகள் அழிந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் சிரிய அகதிகள் மீது துருக்கி மக்கள் வெறுப்புணர்வை காட்டி வரும் நிலையில் அவர்கள் மீதான தாக்குதலும் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

திருப்பி அனுப்ப முடிவு
இந்நிலையில் இரு நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி துருக்கியில் உள்ள சிரியா அகதிகளை அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியை துருக்கி அதிபர் எர்டோகன் தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது ஏற்கனவே 5 லட்சம் அகதிகள் சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 லட்சம் சிரியா அகதிகளை விரைவில் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.