கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்
துபாய்: மத்திய கிழக்கில் மோதல் 5வது வாரமாகத் தொடரும் சூழலில், நமது கண் முன்னே 3வது உலகப் போர் உருவாகும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் எந்தவொரு நாடும் நுழையாமல் இருந்த சூழலில், இப்போது அமீரகம் மற்றும் சவுதி நேரடியாக நுழையும் ஆபத்து உருவாகியுள்ளது.
வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இரு தரப்புமே தொடர்ந்து மாறி மாறி தாக்குதல்களை நடந்து வருகிறது. இதற்கிடையே ஹார்முஸை சுற்றி பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் உலகப் போர் உருவாகும் ஒரு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ்
ஹார்முஸை ஈரான் முடக்கியுள்ளது அனைவருக்கும் தெரியும். இதனால் இதர வளைகுடா நாடுகளின் பொருளாதாரமும் முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளது. இதற்கிடையே ஹார்முஸை திறக்க ஈரானுக்கு பிரஷர் போட.. அமெரிக்கா தலைமையிலான நட்பு நாடுகள் உடன் இணைய ஐக்கிய அமீரகம் ரெடியாகி வருகிறது. ஈரான் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அமீரகம் இந்த போரில் உள்ளே வந்தால், ஈரானுக்கு எதிராகக் களமிறங்கும் முதல் வளைகுடா நாடாக இருக்கும்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஹார்முஸை திறக்க தீர்மானத்தைக் கொண்டு வர அமீரகம் பேசி வருகிறது. அப்படி தீர்மானம் வந்தால் ஜலசந்தியை கட்டாயப்படுத்தித் திறக்க முடியும். இதற்காக அமீரக தூதர்கள் அமெரிக்கா, ஐரோப்பா தரப்புடன் பேசி வருகிறார்கள். அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி பஹ்ரைன், இத்தீர்மானத்திற்கு ஆதரவாக உள்ளது. வாக்கெடுப்பு நாளை வியாழக்கிழமை நடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா
வளைகுடா நாடுகளின் உணவு, ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியம். உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இவ்வழியாகவே செல்கிறது. அமெரிக்கா- இஸ்ரேல் போருக்குப் பதிலடியாக ஈரான் அங்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சூழலில், இதனால் உலக எண்ணெய் சப்ளை/எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமீரக அதிகாரிகள் கூறுகையில், "ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் ராணுவத்தைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஈரான் போட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுதல் உள்ளிட்டவை குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். அபு மூசா போன்ற தீவுகளைக் கைப்பற்றி அதை வைத்து லாபி செய்தால் தேவையான கிடைக்கும் என நினைக்கிறோம்" என்றனர்.
அழுத்தம்
ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்வழிப் பயண சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து இருப்பதாக அமீரக வெளியுறவு அமைச்சகம் கூறியது. அமீரகம் நீண்ட காலமாகவே ஈரான் ஆட்சிக்கு நிதியளித்த நிலையில், அமீரகத்தின் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட பிற வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எதிராகத் திரும்பியுள்ளன.
போர் தீவிரமடையும் சூழலில், ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் அமீரகத்திற்குள் நுழையவோ அல்லது அமீரகம் வழியாகப் பயணம் செய்யவோ தடை விதிக்கப்பட்டது. எமிரேட்ஸ், எட்டிஹாட், ஃப்ளை துபாய் என மூன்று முக்கிய விமான நிறுவனங்களும் இது குறித்து அறிவித்துள்ளன. அதாவது ஈரான் பாஸ்போர்ட் வைத்திருப்போருக்குத் துபாயில் அனுமதி இல்லை. அதேநேரம் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இதில் விதி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெடிக்கும் உலகப் போர்
அமீரகம் மட்டுமின்றி சவுதியும் கூட ஈரானை எச்சரித்துள்ளது. ஈரான் தேவையே இல்லாமல் அண்டை வளைகுடா நாடுகளைத் தாக்கி வருவதாகவும் அந்த தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனச் சவுதி வெளிப்படையாகவே எச்சரித்துள்ளது. தங்கள் பொறுமை குறைந்து வருவதாகவும் ஈரான் மீது இருந்து குறைந்தபட்ச நம்பிக்கையும் சிதைந்துவிட்டதாகவும் சவுதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோல அமீரகம் மற்றும் சவுதி உள்ளே சென்றால் நிலைமை மோசமாகும். பிறகு ஈரானுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் உள்ளே வரும். இது 3வது உலகப் போரை உருவாக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications