For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுக்ரேன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்

By BBC News தமிழ்
|

உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா சுமார் 1,00,000 படையினரை நிறுத்தியுள்ளது. நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளது.

படையினரை நிலைநிறுத்தியது தொடர்பாக இதுவரை ரஷ்யா போதிய விளக்கமளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது அமெரிக்கா. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

சில மேற்குலக நாடுகளைச் சேர்ந்த உளவு அமைப்புகள், 2022ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்றும் கூறியுள்ளன.

மேலும் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனில் ஆயுதங்களைக் குவித்து, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரிப்பதாக ரஷ்ய குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவோ, உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று கூறிவருகிறது.

பிரச்சனை என்ன?

1990கள் வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியத் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.

இப்போதும் உக்ரைன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன். இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. மேலும் கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது ரஷ்யா. இது தான் ரசோ - யுக்ரேனியன் (Russo-Ukrainian) போராக உருவெடுத்தது.

பிரிவினைவாதப் போராளிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போதும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மின்ஸ்க் ஒப்பந்தம்

ரஷ்ய துருப்புகள் முன்னேற்றம் குறித்த படம்
BBC
ரஷ்ய துருப்புகள் முன்னேற்றம் குறித்த படம்

2015ஆம் ஆண்டு உக்ரைனின் அப்போதைய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ - ரஷ்யாவின் விளாதிமிர் புதின் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தான் மின்ஸ்க் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனையைத் தீர்ப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. தொடர்ந்து எல்லையில் இரு தரப்பு படையினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சனை

ரஷ்யா, உக்ரைன் இருநாடுகளுமே கிழக்கு உக்ரைன் பிரதேசத்தைக் குறித்து தங்களுக்கென தனித்தனிப் பார்வையைக் கொண்டுள்ளன. அது ஒன்றோடொன்று ஒத்துப் போகாமல் இருக்கிறது என்கிறார் சதம் ஹவுஸ் அசோசியேட் ஃபெல்லோவான டன்கன் ஆலன்.

உக்ரைன் தன் நிலப்பரப்புகளை மீண்டும் தன் நாட்டோடு இணைக்கவும், தன் இறையாண்மையை நிலைநிறுத்தவும் விரும்புகிறது, ஆனால் ரஷ்யாவோ, கிவ் (Kyiv) நகரத்தில் உள்ள அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி கிழக்கு உக்ரைன் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது தன்னாட்சி அதிகாரத்தைப் பெற முயல்வதாக டன்கன் ஆலன் கருதுகிறார்.

உக்ரைன் உள்நாட்டுத் தேர்தலை நடத்தவில்லை என்றும், கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ராணுவ வீரர்கள்
EPA
ராணுவ வீரர்கள்

ஆனால் உக்ரைன் அரசாங்கமோ, கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவிட்டதாகக் கூறுகிறது.

மின்ஸ்க் ஒப்பந்தத்தின் படி, உக்ரைன் தன் நிலப்பரப்புகளை ரஷ்யாவிடமிருந்து முழுமையாக பெறுவதற்கு முன், உள்நாட்டில் தேர்தலை நடத்த வேண்டும்.

கிழக்கு உக்ரைனில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றால், அப்பகுதி முதலில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என வலியுறுத்துகிறது உக்ரைன். இல்லை எனில் தேர்தல் ரஷ்யாவின் அழுத்தத்தின் கீழ் நடைபெறும் என உக்ரைன் தரப்பு கூறுகிறது.

உள்ளூர் அளவிலான தேர்தல்களை நடத்தாமல் உக்ரைன், கிழக்கு உக்ரைன் பகுதிகளைப் பெற அனுமதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா கடுமையாக எச்சரித்தது.

உக்ரைனின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என புதிய வாதத்தையும் முன் வைத்துள்ளது ரஷ்யா. மேலும் நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதை நிறுத்துவது தொடர்பாக முறையாக உறுதியளிக்க வேண்டும் என்றும் தன் வாதங்களை முன் வைத்துள்ளது ரஷ்யா.

மேற்குலகத்தின் அதிரடி போக்குகள் தொடர்ந்தால் ராணுவ ரீதியில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சமீபத்தில் எச்சரித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Russia is sending more trops to Ukraine. Why Russia in Ukraine border is important in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X