ஈராக்கில் புஷ் செய்த அதே தவறை.. ஈரானில் டிரம்ப் செய்கிறாரே.. தவறான இடத்தில் கை வைக்கும் அமெரிக்கா!
டெஹ்ரான்: ஈராக் நாட்டில் அணு ஆயுதம் இருப்பதாக கூறி அங்கே அமெரிக்கா போர் தொடுத்ததை நாம் மறக்க முடியாது. அங்கே உள்ள எண்ணெய் வளங்களை சூறையாட அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பொய்யாக நடத்திய போரை மறக்கவே முடியாது. அப்போது புஷ் செய்த தவறை.. இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்ய முடிவு செய்துள்ளார். ஈரானில் அணு ஆயுதம் இல்லை என்ற தகவல்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட பின்பும் போர் தொடுப்பதில் உறுதியாக இருக்கிறார் டிரம்ப்... இந்த முறை எண்ணெய் வளத்திற்காக இல்லாமல்.. இஸ்ரேல் நாட்டிற்காக!
அமெரிக்க உளவுத்துறையின் தலைவர் துளசி கப்பார்ட், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்று காங்கிரஸ் சபையில் சாட்சியம் அளித்த கருத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு "மிக அருகில்" இருப்பதாக டிரம்ப் சமீபத்தில் கூறினார். முன்னதாக மார்ச் மாதம் துளசி கப்பார்ட் காங்கிரஸ் சபையில் ஈரான் ஆயுத திட்டத்தை மீண்டும் தொடங்கவில்லை என்றும், அதன் யுரேனியம் கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.. ஆனாலும் அவர்கள் அணு ஆயுதம் தயாரிக்க பல வருடங்கள் ஆகும் என்றும் தெரிவித்திருந்தார்.

துளசி கப்பார்ட்டின் சாட்சியம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்து துளசி கப்பார்ட் காங்கிரஸ் சபையில் சாட்சியம் அளித்தபோது எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி கருத்து தெரிவித்தார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்றும், ஈரான் யுரேனியத்தை அதிக அளவில் செறிவூட்டியிருந்தாலும் இப்போதைக்கு அவர்கள் அணு ஆயுதம் தயாரிக்க முடியாது, என்று கூறி உள்ளார்.
எதிர்த்த துளசி
டிரம்ப்பிற்கு நெருக்கமாக அமெரிக்காவின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் ஈரான் மீது போர் தொடுக்கும் முடிவை எதிர்த்து உள்ளார். ஈரான் அணு ஆயுதம் உருவாக்கி வருகிறது. அந்த நாடு அணு ஆயுதத்தை உருவாக்குவதில் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது, இன்னும் சில வாரங்களில் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும், இதனால் அவர்களை தாக்க போகிறோம் என்று டிரம்ப் கூறி இருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட்.. ஈரான் அணு ஆராய்ச்சி செய்வது சரிதான். ஆனால் ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை. அந்த நாடு இப்போதைக்கு அணு ஆயுதம் உருவாக்கும் சூழல் இல்லை. இன்னும் பல வருடங்கள் ஆகலாம் அதற்கு . இப்போதைக்கு அணு ஆயுதம் உருவாக்கும் சூழல் அங்கே நிலவவில்லை என்று துளசி கப்பார்ட் எதிர்த்து உள்ளார். அதாவது டிரம்ப் போடும் திட்டம் தவறு.. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தில் இல்லை என்பதை துளசி காப்பர்ட் அடித்து சொல்லி இருக்கிறார்.
ஏற்றுக்கொள்ளாத டிரம்ப்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், ஜி-7 மாநாட்டிற்கான பயணத்தை டிரம்ப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வாஷிங்டனுக்கு திரும்பியபோது, அமெரிக்க உளவு அமைப்புகளின் மதிப்பீட்டை நிராகரித்தார்.
"துளசி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை" என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் அளவிற்கு "மிக அருகில்" இருக்கிறது. அவர்கள் கைக்கு அணு ஆயுதம் செல்ல கூடாது என்று கூறி உள்ளார். நேற்று இரவு டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் கமேனி இருப்பிடம் குறித்து எங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது அவர் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை.
அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது; ஈரான் சீக்கிரம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஈரான் நிபந்தனையற்ற சரணடைவதே ஒரு தீர்வு என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார். ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது. ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன்.. ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள். உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள் என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.
ஈராக் தாக்குதல் மறக்க முடியுமா?
அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தலைமையிலான அமெரிக்கா 2003-ல் சதாம் உசைன் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி ஈராக் மீது படையெடுத்தது. அந்த கருத்து பின்னர் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. அங்கே எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காக இந்த போர் தொடுக்கப்பட்டதாக பின்னர் நிரூபணம் ஆனது.
அமெரிக்க உளவுத்துறையின் தலைவர் துளசி கப்பார்ட் அளித்த சாட்சியத்தை டிரம்ப் நிராகரித்ததோடு, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு அருகில் இருப்பதாக இப்போது டிரம்ப் கூறியுள்ளதால்.. புஷ் செய்த அதே தவறை டிரம்ப் செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications