புதிய திருப்பம்.. ஐசக் ஹெர்சாக்.. 2013இல் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவர்.. இஸ்ரேல் அதிபராக தேர்வு
ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதியும் பாரம்பரிய இஸ்ரேலிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஐசக் ஹெர்சாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் தற்போது அதிபராக உள்ளவர் ருவன் ரிவ்லின். இவரது பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், புதிய அதிபரைத் தேர்வு செய்ய இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

புதிய அதிபர்
அதில் 60 வயதான ஐசக் ஹெர்சாக் இஸ்ரேல் நாட்டின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன், இஸ்ரேலின் தொழிற்கட்சியின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஐசக் ஹெர்சாக் இருந்துள்ளார். இவர் கடந்த 2013 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகப் போட்டியிட்டவர். ஆனால் அந்தத் தேர்தலில் இவரால் வெற்றி பெற முடியவில்லை.

2013இல் தோற்றவர்
இருப்பினும், தற்போது இவர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசக் ஹெர்சாக் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். மூத்த அரசியல்வாதி என்பதால் எளிதாக அதிபராக தேர்நெடுக்கப்படுவார் என்றே கணிக்கப்பட்டது.

யார் இந்த ஐசக் ஹெர்சாக்
ஐசக் ஹெர்சாக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இஸ்ரேல் நாட்டின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவரது தந்தை சைம் ஹெர்சாக்கும் இஸ்ரேல் அதிபராக இருந்தவர். அதற்கு முன் ஐநா சபையின் இஸ்ரேல் தூதராகவும் சில காலம் இருந்துள்ளார். அவரது மாமா, அபா எபன், இஸ்ரேலின் முதல் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், ஐநா சபை மற்றும் அமெரிக்காவின் தூதராக இருந்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலை
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த 4 முறையும் தற்போது பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெரும்பான்மை தேவையான 61 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், அங்கு எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளது. அவர்களுக்குப் பெரும்பான்மை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கையாள ஐசக் ஹெர்சாக் சரியான நபராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications