நல்லா பாருங்க.. காதுகள் வித்தியாசமா இருக்கு.. இது போலி புதின்? பகீர் கிளப்பும் உக்ரைன் உளவுத்துறை
மாஸ்கோ: தற்போது பொது இடங்களில் நடமாடுவது உண்மையான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்லை. அவர் போலியானவர் என உக்ரைன் உளவுத்துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது போர் துவங்கிய ரஷ்யாவுக்கு அந்நாட்டை பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமாக இல்லை.
இதனால் தான் 5 மாதங்களை கடந்து 6வது மாதமாக உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யும் வேளையில் ரஷ்யாவை கடுமையாக எதிர்த்து பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

புதின் குறித்த விவாதம்
இது ஒருபுறம் இருக்க ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பதாகவும் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் எனவும் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இருப்பினும் இதுதொடர்பாக ரஷ்யா தரப்பில் பெரிய அளவில் விளக்கம் அளிக்கப்படவில்லை. புதின் இயல்பாக உள்ளார் என்றே கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை, உளவு நிறுவனங்கள் சார்பில் புதின் குறித்து பல்வேறு விஷயங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

உக்ரைன் உளவுத்துறை புதிய தகவல்
இந்நிலையில் தான் விளாடிமிர் புதின் பற்றிய புதிய தகவலை உக்ரைன் நாட்டின் ராணுவ உளவுத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது வெளியில் நடமாடுவது உண்மையான ரஷ்ய அதிபர் புதின் இல்லை. இது புதின் வேடத்தில் உள்ள போலியான நபர் என உக்ரைன் உளவுத்துறை கூறியுள்ளது. இதுபற்றி உக்ரைன் பாதுகாப்பு துறையின் உளவுப்பிரிவு தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உளவுத்துறை கூறியது என்ன?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பொதுவெளியில் நடமாடாமல் இருப்பதற்காக பாடி டபுள்களை (புதின் போல் உடல் தோற்றம் கொண்ட நபர்) பயன்படுத்துகிறார். புதினின் சமீபத்திய உடல் தோற்றம் மாறியுள்ளது. நடை, உயரம், பழக்கவழக்கம் மாறுபட்டுள்ளது.

காதுகளில் வித்தியாசம்
மேலும் காதுகளிலும் வித்தியாசம் உள்ளது. கைரேகையை போல் ஒவ்வொருவரின் காதுகளும் தனித்துவமாக வித்தியாசமாக இருக்கும். தற்போது புதினின் காதுகள் மாறியுள்ளன. புதின் தன்னை போல் உள்ளவர்களை பயன்படுத்துகிறார். இதனால் சில சமயங்களில் விளாடிமிர் புதினா அல்லது அவருக்கு பதில் வேறு யாராவது உள்ளனர்களா? என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. குறிப்பாக ஈரான் பயணத்தில் அவர் விமானத்தில் இருந்து வருவதை பார்த்து நீங்களே சொல்லுங்கள்'' என கூறியுள்ளார்.

ஈரான் சென்ற புதின்
உக்ரைன் மீதான போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் நிலையில் கடந்த மாதம் ஈரான் சென்ற விளாடிமிர் புதின் ஈரான் மற்றும் துருக்கி நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை குறிப்பிட்டு தான் உக்ரைன் உளவுத்துறை தலைவர் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இருப்பினும் இதுபற்றி ரஷ்யா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications