தாலிபான்களுடன் சீனா, பாகிஸ்தான் படு நெருக்கம்.. அமெரிக்காவை நம்பி.. இப்போ இந்தியாவுக்குதான் தலைவலி!
காபூல்: ஆப்கானிஸ்தானில், முதலில் ரஷ்யா.. இப்போது அமெரிக்கா.. ஆகிய இரு நாடுகளை வெளியேற்றியது பாகிஸ்தான் தான்.. அமெரிக்கா மற்றும் தாலிபான்களோடு சேர்ந்து கொண்டு ரஷ்யாவை வெளியேற்றினார்கள். இப்போது, அமெரிக்கா (ஆம்) மற்றும் தாலிபான்களுடன், சேர்ந்து கொண்டு அமெரிக்காவையே வெளியேற்றியிருக்கிறார்கள் என்பதுதான் சர்வதேச அரசியல் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவோரின் கடந்த சில நாட்களின் பேசு பொருளாக மாறிவிட்டது.
ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானும், சீனாவும் நினைத்தபடி மாற்றங்கள் நடந்துள்ளதால், இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், அதனோடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கம் காட்டிய இந்தியாவுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன? என்பது பற்றி தான் இந்தியர்கள் அதிக அளவுக்கு கவலையோடு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ரஷ்யா வெளியேற்றம்
ஆப்கானிஸ்தான் எப்போதுமே "பெரிய அண்ணன்கள்" கையில் விளையாட்டு பொம்மையாகத்தான் இருந்துள்ளது. ரஷ்யா மிகப்பெரிய வல்லரசாக கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது.., ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படைகள் அதன் கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருந்தன. அப்போதுதான் தாலிபான்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தது அமெரிக்கா. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இதற்கு உடந்தை. இப்படித்தான் வேறுவழியில்லாமல் 1988ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவது ரஷ்யப் படைகள். 2021ம் ஆண்டு இதே போன்று தான் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு
இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்குள் ஆவேசமாக நுழைந்த அமெரிக்கா படிப்படியாக படைகளை பெருக்கி தாலிபான்களை விரட்டி தங்கள் கைக்குள் கொண்டு வந்தது. இப்போது என்னடாவென்றால் ஜனநாயக முறைப்படி அமைந்த அஷ்ரப் கனி தலைமையிலான அரசை விட்டுவிட்டு, தாலிபான்கள் உடன் ஆப்கானிஸ்தான் விவகாரம் பற்றி அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அந்த நாட்டை விட்டு வெளியேறுகிறது. தாலிபான்களுடன் கைகோர்த்துக்கொண்டு நமட்டு சிரிப்பு சிரிக்கிறது பாகிஸ்தான்.

தாலிபான்களுடன் சீனா நட்புறவு
இந்த நிலையில்தான், தாலிபான்கள் உடன் நட்பு உறவு வைத்துக் கொள்ளத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நாடு முழுமையாக வீழ்ச்சி அடையும் முன்பாகவே தாலிபான் பிரதிநிதிகள் சீனாவுக்கு சென்று வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். சீனாவுக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் ஆப்கானிஸ்தான் மண்ணில் இடம் தரமாட்டோம் என்று தாலிபான்கள் அப்போது உறுதியளித்தனர்.

இந்தியாவுக்கு சிக்கல்கள்
ஆப்கானிஸ்தான் 1996 முதல் 2001 வரை தாலிபான்களால் ஆட்சி செய்யப்பட்டது. அப்போது பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் தீவிரமான மதசார்பு போன்றவற்றால் உலகநாடுகளின் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த முறை அப்படி எதையும் செய்துவிடக்கூடாது, பல நாடுகளின் ஆதரவு தங்களுக்கு தேவை, நீண்ட காலம் இங்கு ஆட்சி செய்ய வேண்டுமென்று தாலிபான்கள் முடிவு செய்திருப்பதை அவர்களது பல நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன. பெண்களை வேலைக்கு செல்ல சம்மதிக்க கூடும், ஆனால் ஆண்கள் துணையோடு. இப்படி பல கண்டிஷன்களுடன், உலக நாடுகளை நம்பவைக்க தாலிபான்கள் முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களோடு பல தீவிரவாத அமைப்புகள் தொடர்பில் இருப்பது இந்தியாவுக்கு பெரிய தலைவலி. அதைவிட முக்கியமாக பாகிஸ்தான் அவர்களுடன் நட்புறவில் இருப்பது ஆகப் பெரிய ஒற்றை தலைவலி. இவர்களோடு சீனா கை கொடுத்திருப்பது தலைவலியோடு சேர்ந்து திருகு வலியும் வந்தது போன்ற நிலைமைக்கு நம்மை தள்ளி உள்ளது என்கிறார்கள் அரசியல் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

சீன சாலை திட்டம்
நாடு பிடிக்கும் ஆசை கொண்ட சீனா.. இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தனது வல்லாதிக்கத்தின்கீழ், அடிபணிய வைக்க முயற்சிகளை செய்து வருகிறது. ஏற்கனவே, சீனா விரித்த கடன் வலையில் இலங்கை விழுந்துவிட்டது. பாகிஸ்தான் எப்போதோ சரணடைந்து விட்டது. ஆப்கானிஸ்தானில் அமைய உள்ள தாலிபான்கள் அரசு என்று கிடையாது ஏற்கனவே இருந்த அஷ்ரப் கனி அரசு கூட சீனா செயல்படுத்தி வரும் பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தில் ஆப்கானிஸ்தானை இணைத்துக்கொள்ள தான் விரும்பினார். சீனா-பாகிஸ்தான் பொருளாதார காரிடார் அல்லது பெல்ட் மற்றும் ரோடு திட்டம் ஆகிய ஏதாவது ஒன்றில் தங்களை இணைத்துக்கொள்ள தான் ஆப்கன் அரசு விரும்புகிறது. சீனாவின் உள்கட்டுமான திட்டங்களை தாலிபான்கள் தலைமையிலான ஆப்கான் அரசு சார்ந்து இருக்க போகிறது.

ஈரானுடனும் நட்பு இல்லை
ஏற்கனவே, ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி இந்தியா நிறுத்திவிட்டது. குறைந்த விலையில் நமக்கு கச்சா எண்ணை கிடைத்தாலும் கூட அமெரிக்கா வற்புறுத்தியதால், ஈரானை பகைத்துக்கொண்டு நாம் கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தினோம். இப்போது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான் என வடக்கு மற்றும் மேற்கு மண்டல நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளன. நேரு காலத்தில் இருந்து, அணிசேரா நாடுகள் என்ற நிலையில் இருந்தது இந்தியா. எனவே, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பாராட்டியது. ஆனால், சமீபகாலமாக அமெரிக்காவுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நட்பு கரத்தை நீட்டியதுதான் இந்தப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் நட்புகளை நாம் இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. அமெரிக்காவின் கைகள் தளர்வடைய தொடங்கியுள்ள இந்த சூழ்நிலையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு என்ற வகையில் இந்த பிராந்தியத்தில், இந்தியா தான் தனித்து நின்று எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. என்னதான் இந்தோ பசிபிக் மண்டலத்தில் அமெரிக்காவின் துணை நமக்கு இருந்தாலும், சீனா, பாகிஸ்தான், தாலிபான் ஆகியோரின் நட்பு, தெற்கு மத்திய ஆசியாவில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவு கொள்கை தோல்வி
இந்தியா இதுவரை தாலிபான்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டது கிடையாது. இப்போது சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்களோடு இணைந்து செயலாற்ற தயார் என்று அறிவித்துள்ளனர். ஆனால் இந்தியா இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லை. இப்போது ஏதாவது கருத்து தெரிவித்தாலும் அது நமக்கு பெரிய பலனை தந்து விடப் போவது கிடையாது. ஏனென்றால் தலிபான்களுடன் பாகிஸ்தானும், சீனாவும் நீண்ட நாட்களாக நீண்டகாலமாக நட்புறவைப் பேணி வருகின்றனர். அவர்களை எப்போதோ அவர்கள் தங்கள் கைகளுக்குள் போட்டுக் கொண்டு விட்டனர். என்னதான் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் போன பிறகு அமெரிக்கா பழைய நிலைமைக்கு திரும்பி விட்டதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் தெரிவித்தாலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை தோல்வியை சந்தித்துள்ளன என்பதுதான் எதார்த்தம். ஆனால், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டதற்காக இந்தியாவும் பொருளாதார ரீதியாக பல இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நாம் தொடர்பு கொண்டு பேசிய சில பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியா செய்து வரும் பணிகள்
விஷயம் இதுதான்.. 2001ம் ஆண்டு தாலிபான்கள் ஒடுக்கப்பட்ட பிறகு அந்த நாட்டில் அமைந்த ஜனநாயக அரசுடன் இந்தியா நட்புறவு பாராட்டியது. அங்கு பல்வேறு, உள்கட்டமைப்பு பணிகளில் இந்தியா ஈடுபட்டது. சுமார் 400க்கும் மேற்பட்ட பெரிய திட்டப்பணிகளை இந்தியா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய பணிகளுக்கு தாலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் முழுக்க சென்றுள்ளதால், இந்தியா செய்து வரும் திட்டப்பணிகளின், நிலைமை கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சல்மா அணை
ஹெராட் மாகாணத்தில் உள்ள 42 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள சல்மா அணையை இந்தியா அமைத்து வருகிறது. 2016ல் துவக்கப்பட்ட இந்த திட்டம், ஆப்கான்-இந்தியா நட்பு அணை என்றும் அழைக்கப்படுகிறது.
ஜரஞ்ச்-தெலாராம் ஹைவே: பார்டர் ரோட்ஸ் அமைப்பால் கட்டப்பட்ட 218 கிமீ சரஞ்ச்-தெலராம் நெடுஞ்சாலை மற்ற ஈரானுடனான ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. 150 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த நெடுஞ்சாலை காஷ்ருத் ஆற்றின் வடக்கே ஜரஞ்சின் தெலராம் வரை செல்கிறது. தெற்கில் கந்தஹார், கிழக்கில் கஜினி மற்றும் காபூல், வடக்கில் மசார்-இ-ஷெரீப் ஆகிய சாலைகளை இணைக்கிறது.

நெடுஞ்சாலை
ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்திற்கான இந்தியாவின் நிலவியல் பாதையை பாகிஸ்தான் மறுப்பதால், இந்த நெடுஞ்சாலை இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது ஈரானின் சாபஹார் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு ஒரு மாற்று வழியை வழங்குகிறது. கொரோனா காலத்தில், இந்தியா 75,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு சாபஹார் வழியாக கொண்டு சென்றது நினைவிருக்கலாம். 300க்கும் மேற்பட்ட இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆப்கானிஸ்தானுடன் சாலை அமைக்க உழைத்தனர். வெளியுறவு அமைச்சக தகவல்படி, 11 இந்தியர்கள் மற்றும் 129 ஆப்கானியர்கள் கட்டுமான பணிகளின்போது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.

நாடாளுமன்றம்
காபூலில் உள்ள ஆப்கான் பாராளுமன்றம் இந்தியாவால் 90 மில்லியன் டாலரில் கட்டப்பட்டது. இது 2015ல் திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கட்டிடத்தில் உள்ள ஒரு பிளாக்கிற்கு, இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரிடப்பட்டது.

மின்சார உற்பத்தி
ஆப்கானிஸ்தானில் காபூலின் வடக்கே பாக்லான் மாகாணத்தின் தலைநகரான புல்-இ-கும்ரியிலிருந்து 220kV டிரான்ஸ்மிஷன் லைன் போன்ற மின் உள்கட்டமைப்பை புனரமைக்கும் திட்டங்களில் இந்தியா ஈடுபட்டது.
இந்திய ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் பல மாகாணங்களில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மீட்டெடுக்க உழைத்தனர்.

சுகாதார உதவி
இந்தியா 1972ல் காபூலில் கட்ட உதவிய ஒரு குழந்தைகள் மருத்துவமனையை மீண்டும் புனரமைத்துள்ளது - 1985ல் இந்திரா காந்தி குழந்தை நல நிறுவனம் என்று அதற்கு பெயரிடப்பட்டது. ஆனால் போருக்குப் பிறகு மருத்துவமனை சிதைந்தது. எல்லைப்புற மாநிலங்களான படாக்ஷான், பால்க், கந்தஹார், கோஸ்ட், குனார், நங்கர்ஹார், நிம்ரூஸ், நூரிஸ்தான், பாக்டியா மற்றும் பக்திகா ஆகிய இடங்களில் கிளினிக்குகளையும் இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது.

மற்ற திட்டங்கள்
இந்தியா சார்பில் ஆப்கனிலுள்ள பள்ளிகளுக்கு மேசைகள் மற்றும் பெஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தொலைதூர கிராமங்களில் சோலார் பேனல்கள் மற்றும் காபூலில் கழிப்பறை பிளாக்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் பயிற்சி நிறுவனங்கள், ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சிவில் சர்வீஸில் வழிகாட்டுதல் திட்டங்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளில் இந்திய அரசு உதவி செய்தது.

நிலுவையிலுள்ள திட்டங்கள்
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஜெனீவா மாநாட்டில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானுடன்-இந்தியா காபூல் மாவட்டத்தில் ஷடூட் அணை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக அறிவித்தார், இது 2 மில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும். 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள சுமார் 100 சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்குவதாகவும் அவர் அறிவித்தார். கடந்த ஆண்டு, காபூலின் தெற்கே உள்ள பாலா ஹிசார் கோட்டையை மறுசீரமைப்பதற்காக இந்தியா 1 மில்லியன் டாலர்களை வழங்க உறுதியளித்தது. பாலா ஹிசார் முன்பு முகலாய கோட்டையாக இருந்தது. அதன் ஒரு பகுதி மன்னர் ஜஹாங்கிரால் மீண்டும் கட்டப்பட்டது. மன்னர் ஷாஜஹானின் குடியிருப்பாக பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டங்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications