சீனாவின் நண்பன்! அன்று நாடு கடத்தப்பட்டவர் இன்று பாகிஸ்தான் பிரதமர் - யார் இந்த ஷெபாஸ் ஷரீஃப்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ள ஷெபாஸ் ஷரீஃப் யார்? அவரது அரசியல் போக்கு எப்படி இருக்கும்? என்பன போன்ற உங்களின் பல கேள்விகளுக்கான விடை இப்பதிவில் இருக்கிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியடைந்ததை தொடர்ந்து இன்று பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷரீஃப் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இவர் வேறு யாருமல்ல. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷரீபின் இளைய சகோதரர்தான். எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் தற்போதைய தலைவராக இருந்து வருகிறார்.
பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் நீண்டநாள் அரசியல் எதிரியுமான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இம்ரான் கானுக்கு மாற்றாக தற்போது ஷெபாஷ் ஷரீஃப் ஆட்சி பரவாயில்லை என்ற நிலைக்கு வந்து ஆதரவளித்துள்ளனர்.

ஷெபாஸின் பலம்
ஷெபாஸ் ஷரீஃப் தனது சகோதரர் நவாஸ் ஷரீபை போல் மக்கள் கூட்டத்தை தன்பக்கம் இழுக்கும் கவர்ச்சியான பேச்சாளர் இல்லை. அவரது பலம் நிர்வாகத் திறனில் இருப்பதாக பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கருதுகின்றனர். ஷெபாஸ் ஷரீஃப் ஒரு பணக்கார தொழில்பதிபரின் மகன்.

ஆரம்ப காலம்
செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஷெபாஸ் ஷரீஃப் தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தாமல் தனது சகோதரர் நவாஸ் ஷரீஃபை போலவே அரசியலை தேர்ந்தெடுத்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் லாஹூரில் உள்ள அரசு கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் தனது குடும்ப நிறுவனமான இத்திஃபாக் குழுமத்தில் பணிபுரிந்தார்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர்
1990 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷரீஃப் தேர்வு செய்யப்பட்டபோது, முதல்முறையாக பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் ஷெபாஸ் ஷரீஃப். அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு நவாஸ் ஷரீஃப் பிரதமரான பின்னர் பாகிஸ்தானின் சக்திவாய்ந்த முக்கியத்துவமான மாநிலமாக கருதப்பட்ட பஞ்சாபின் முதலமைச்சராக ஷெபாஸ் ஷரீஃப் தேர்வானார்.

நாட்டை விட்டே ஓடிய ஷெபாஸ்
ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையை மாற்ற நவாஸ் ஷரீஃப் முயன்றபோது அவரையும் ஷெபாஸையும் ராணுவம் விரட்டிவிட்டு ஆட்சியை கையில் எடுத்தது. ஷெபாஸ் குடும்பத்தோடு சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார். 2007 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியாவில் இருந்த நவாஸ் ஷரீஃபும் ஷெபாஸ் ஷரீஃபும் நாடு திரும்பியவுடன் தத்தமது பதவிகளில் அமர்ந்தனர். ஷெபாஸின் தலைமையில் பஞ்சாப் மாநிலத்தின் உள்கட்டமைப்பு பெரும் அளவில் மேம்படுத்தப்பட்டது.

இம்ரான் கானிடம் தோல்வி
2017 ஆம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக நவாஸ் ஷரீஃப் ஆட்சி கலைக்கப்பட்டவுடன் அவருக்கு மாற்றாக பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் ஷெபாஸ் ஷரீஃப். ஆனால் 2018 தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவராக ஷெபாஸ் இருந்து வந்தார். இவர் சீனாவின் நிதியுதவியுடன் பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட திட்டங்களில் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

சீனாவின் நண்பன்... அமெரிக்காவின் எதிரி
சீனாவுக்கு ஆதரவானவராகவும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைபாடு கொண்டவராகவும் ஷெபாஸ் பார்க்கப்படுகிறார். கடந்த வாரம் அவர் அளித்த பேட்டியில்கூட, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என்று கருத்து தெரிவித்தார். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சீனாவுடன் நெருக்கமாக இருப்போம் என்றும் அவர் கூறி இருக்கிறார். சீனாவும் ஷெபாஸ் ஷரீஃப் பஞ்சாபில் மேற்கொண்ட திட்டங்களுக்காக பாராட்டு தெரிவித்து இருக்கிறது.

ஊழல் வழக்குகள்
தனது சகோதரர் நவாஸ் ஷரீஃபை போலவே ஷெபாஸ் ஷரீஃப் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஷெபாசும் அவரது மகனும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அவர்களின் குடும்ப வங்கிக் கணக்குகளை பிரிட்டன் முடக்கியது. ஆனால், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஷெபாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிரிட்டன் தேசிய குற்ற விசாரணை நிறுவனம் தெரிவித்து. பிரிட்டனில் அந்த வழக்கு கைவிடப்பட்டாலும் பாகிஸ்தானில் அந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

ஷெபாஸ் ஷரீஃபுக்கு காத்திருக்கும் சவால்கள்
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசை கவிழ்த்துவிட்டு ஷெபாஸ் ஷரீஃப் ஆட்சிக்கு வந்திருப்பதால் அவரை கண்கொத்திப் பாம்பாக தெஹ்ரிக் கட்சியினரும், பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாகிஸ்தானின் பணவீக்கம் 13 சதவீதமாக உள்ளதுடன் அதன் பண மதிப்பும் குறைந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய சவால் தற்போது ஷெபாஸ் ஷரீஃப் முன் இருக்கிறது. அத்துடன் தான் ஒரு சிறந்த நிர்வாகி என பெற்ற பெயரையும் ஷெபாஸ் தக்க வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications