அமெரிக்க அரசு முடக்கம் - நாள் 6: இந்த நெருக்கடிக்கு யார் காரணம்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அரசு கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிப்போய் கிடக்கிறது.

அதிபர் ஒபாமா முதன் முதலாக பதவியேற்ற நாளிலிருந்தே, குடியரசுக் கட்சியினர் குடைச்சல் கொடுத்து வந்தாலும், இப்போதைய அளவுக்கு அரசை முடக்கிப்போடும் நிலை ஏற்பட்டதில்லை. குடியரசுக் கட்சியினர் மீது பொது மக்கள் பெரும் கோபத்தோடு இருக்கின்றனர்.

Ted Cruz

இரு கட்சியினருக்குமிடையே புதிதாக அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தைகள் ஏதும் தொடங்கப்படவில்லை. எப்போது முடியும் இந்த முடக்கம் என்ற புலம்பல்கள் குடியரசுக் கட்சியினரிடமே காணப்படுகின்றன. ஆனாலும் சீக்கிரம் முடிவுக்கு வரக் கூடிய அறிகுறிகுள் ஏதும் தென்பட வில்லை.

தனி ஒருவர் தான் காரணமா?

இந்த அளவுக்கு இரு கட்சியினருக்கும் விரிசல் ஏற்பட்டு முட்டுக்கட்டை ஏற்பட 2012- ல் டெக்சாஸிலிருந்து முதன் முறையாக தேர்ந்தெடுக்கபட்ட செனட்டர் 'டெட் க்ருஸ்' தான் காரணமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஒபாமா கேர் திட்டத்தை நிறுத்துமாறு அரசை பணிய வைக்க, அரசு செலவினங்களுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றாமல் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது இவரது திட்டமாகும்.

சொந்தக் கட்சியை இக்கட்டில் மாட்டி விட்டவர்

சமீப காலமாக ஒபாமா கேர் திட்டத்தை முடக்க வேண்டும் என்று அதி தீவிரமாக குரல் கொடுத்து வரும் டெட் க்ரூஸ் நாடெங்கிலும் குடியரசுக் கட்சி தொண்டர்களை உசுப்பேத்தும் வகையில் பேசி வந்துள்ளார். செனட் சபையில் ஒபாமா கேர் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 21 மணி நேரம் பேசியிருக்கிறார்.

ஏற்கனவே சபையில் இயற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட இந்த திட்டத்தை வாபஸ் பெற இயலாது என்பதே பெரும்பான்மையான குடியரசுக் கட்சியினரின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில், கட்சியின் தீவிர வலதுசாரி அமைப்புகளை இணைத்துக் கொண்டு, கட்சி அவைத் தலைவர் ஜான் பேனருக்கு பட்ஜெட் நிறைவேற்றக் கூடாது என்று நெருக்கடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இடைத் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், தற்போது குடியரசுக் கட்சிக்கு பெரும் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ளதாக டெட் க்ருஸ் மீது, உட்கட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பித்தம் தெளியுமா ?

பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை

ஒரு சில தீவிர வலதுசாரி கட்சிகார்ரகளின் எதிர்ப்புகளுக்காக, அரசை முடக்குவது என்பது ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அதிபர் ஒபாமா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஜனநாயகக் கட்சியினரோ, தானாக வலையில் வந்து சிக்கிய மீனைப் போல், குடியரசுக்கட்சியின் செயல்பாடுகளை பார்க்கின்றனர். ஏற்கனவே அதிகாரப் பூர்வமாக 'அரசு முடக்கம்' ஆகி மக்களின் கோபம் எதிர்க் கட்சியினர் மீது ஏற்பட்டு விட்ட பிறகு, எந்த வித சமாதானத்திற்கும் அவர்கள் விரும்பவில்லை. முடிந்த வரைக்கும் இதை வாக்கு வங்கியாக மாற்றும் முயற்சியைத்தான் விரும்புகிறார்கள்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல், எப்படி இந்த முடக்கத்திலிருந்து வெளிவரலாம் என்று குடியரசுக் கட்சியினர்' போராடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் ஒரு யோசனையைக் கொடுத்து சிக்கலை இன்னும் பெரிதாக்கியுள்ளார் டெட் க்ரூஸ்.

மொத்தமாக பட்ஜெட் நிறைவேற்றாமல், தனித்தனி செலவினங்களுக்கு மசோதா தாக்கல் செய்யலாம், ஒபாமா கேர் திட்டத்தை விட்டு விடலாம் என்ற யோசனையை சொன்னவரும் இவரே.

இது ஒபாமாவையும் அவரது கட்சியினரையும் மேலும் உசுப்பேத்தி விட்டது, பேச்சு வார்த்தைகள் முற்றிலும் தடை பட்டு போனது.

யார் இந்த டெட் க்ரூஸ்

டெட் க்ருஸின் தந்தை க்யூபாவை சேர்ந்த ரஃபேல் க்ருஸ். அவரது தாயார் எலனார் எலிசபெத் அமெரிக்கராவர். இவர்கள் கனடா நாட்டில் வசிக்கும் போது அங்கு கேல்கரி என்ற நகரில் 1970ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பிறந்தார்.. பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி, ஹார்வர்ட் லா ஸ்கூல் உள்ளிட்ட பிரபல கல்லூரிகளில் சட்டம் பயின்று டெக்சாஸில் வழக்கறிஞராக பணி புரிந்தவர்.

டெக்சாஸ் மாநில அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார். குடியரசுக் கட்சியின் டீ பார்ட்டி பிரிவின் பெரும் ஆதரவோடு முதன் முறையாக கடந்த ஆண்டு செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெக்சாஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க செனட்டர்களில் லத்தீன் இனத்தின் முதல் பிரதிநிதியும் இவரே ஆவார்.

2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஒரு கண்

அதிபர் ஒபாமாவின் வெற்றி, லத்தீன் இனத்தவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த தேர்தலில் போட்டியிட இரு கட்சியிலும் லத்தீன் இனத்தவர்கள் பெரும் ஆர்வத்தோடு உள்ளனர். குடியரசுக் கட்சியின் செனட்டர் ப்ளோரிடாவின் மார்க்கோ ரூபியோ ஏற்கனவே களத்தில் குதித்து ஆதரவு திரட்டி வருகிறார். ஜனநாயக் கட்சியில், டெக்சாஸ் சான் அண்டோனியோ நகர மேயர் ஜூலியன் கேஸ்ட்ரோ ஆர்வத்துடன் இருக்கிறார். ஹிலரி க்ளிண்டன் போட்டியிடுவாரா இல்லையா என்ற முடிவு தெரிந்த பிறகு தான் ஜன நாயகக் கட்சியின் போட்டியாளர்கள் பற்றி தெரிய வரும்.

இந் நிலையில் டெட் க்ருஸும் 2016 அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். தனக்கு தேசிய அளவில் கட்சியினர் மத்தியில் செல்வாகை ஏற்படுத்த, அதி தீவிர வலது சாரிக் கொள்கைகளை கையில் எடுத்துள்ளார். அதன் மூலம் கட்சியினரிடம், குறிப்பாக டீ பார்ட்டி குழுவினரிடம் ஒரளவு செல்வாக்கும் பெற்றுள்ளார்.

முதலுக்கே மோசமா?

ஆனால் தற்போதைய அரசு முடக்கத்திற்கு, சொந்த கட்சியினரே இவரை குற்றம் சாட்டுவதால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்ப்ட காரணமானவர் என்று நடுநிலை கட்சிக்கார்ர்களிடம் செல்வாக்கு குறைந்துள்ளது.

கனடாவில் பிறந்த டெட் க்ரூஸ் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதியானவர் தானா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அவர் தாயார் அமெரிக்கர் என்பதால் கனடாவில் பிறந்தாலும, அமெரிக்கராக பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய தாயார் அரசுப் பணியில் கனடாவில் இல்லை எனபதுவும் குறிப்பிடத் தக்கது. சமீப காலம் வரை கனடா நாட்டின் குடியுரிமையையும் வைத்து இருந்தார். பிறந்தவுடன் அமெரிக்க் குடியுரிமைச் சான்றிதழ் பெறவில்லை என்ற சட்ட ரீதியான சிக்கல்களும் உள்ளதாக கருத்து எழுந்தது. ஒருவேளை அதிபர் பதவிக்கு போட்டியிட்டால் இந்த கேள்விகள் எல்லாம் பரபரப்பாக பேசப்படும்.

ஆனால் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியவர் என்று கருதப்படும் நிலையில், அதிபர் பதவிக்கான உட்கட்சி தேர்தலில் வெற்றி பெறுவாரா? அல்லது இரண்டாம் தடவைக்கான செனட் தேர்தலிலேயே, 'ரெட் நெக்' டெக்சாஸை நீலக் கலராக மாற்றிவரும் ஜனநாயகக் கட்சியினரிடம் தோற்றுப் போவாரா?

- ஒன்இந்தியா சிறப்புக் கட்டுரை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+