மதுரையில் பூர்வீக வீடு.. காஞ்சி சங்கரமடத்திற்கு தானமாக எழுதிக்கொடுத்த சுப்ரமணிய சுவாமி
காசி: முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் சுப்ரமணியசுவாமி மதுரையில் உள்ள தனது பூர்வீக வீட்டினை காஞ்சி சங்கரமடத்திற்கு தானமாக வழங்கினார். வீட்டின் சாவி மற்றும் பத்திரங்களை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சாமிகளிடம் ஒப்படைத்தார்.
சென்னை மயிலாப்பூரில் பிறந்தாலும் சுப்ரமணியசுவாமியின் பூர்வீகம் மதுரை மாவட்டம்தான். அதை அவ்வப்போது கூறி வருவார். கனிதத்தில் முதுகலைப்பட்டம், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டப்படிப்பை முடித்தாலும் சுப்ரமணியசுவாமி தனது பூர்வீகத்தை எப்போதும் மறந்ததில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து சுப்ரமணியசுவாமி, மதுரைக்கு வந்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து எம்பி தேர்தலில் போட்டியிட்டார். தனது பூர்வீகம் மதுரை அருகே சோழவந்தான் என்று கூறி பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்றார்.
மதுரைக்காரர் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்துவார் சுப்ரமணியசுவாமி. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தவர் சுப்ரமணியசுவாமி.
மதுரை மாவட்டம் முள்ளிப்பாளையம் கிராமத்தில் உள்ள அஹ்ரஹாரம் தெருவில் சுப்ரமணியசுவாமிக்கு பூர்வீக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டினை காஞ்சி சங்கரமடத்திற்கு தானமாக கொடுத்துள்ளார்.
காசியில் உள்ள சங்கரமடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஜூலை 5ஆம் தேதி செப்டம்பர் 29ஆம் தேதி வரைக்கும் சதுர்மாஸ்ய விரதம் கடைபிடித்தார். இன்றைய தினம் சதுர்மாஸ்ய விரதம் விஸ்வ ரூப யாத்திரையுடன் நிறைவடைகிறது.
காசியில் விஜயேந்திர சரஸ்வதி சாமிகளிடம் வீட்டு பத்திரம் மற்றும் சாவியினை ஒப்படைத்தார். காஞ்சி சங்கரமத்தின் நற்காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு சுப்ரமணியசுவாமி கூறியதாக மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் தெரிவித்துள்ளார். பூர்வீகத்தை யாரும் மறக்க மாட்டார்கள் எதற்காகவும் விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக வீட்டினை காஞ்சி சங்கரமடத்திற்கு தானமாக கொடுத்துள்ளார் சுப்ரமணியசுவாமி.












Click it and Unblock the Notifications