‘உளவுத்துறை போலீஸ் பேசுறேன்.. புகார் வருது.. ஜப்தி பண்ணிருவோம்’- 7 லட்சத்தை அபேஸ் செய்த இளைஞர் கைது!
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் உளவுத்துறை போலீஸ் என கூறி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் 7 லட்சம் பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான மற்றொருவருக்கு போலீஸ் வலைவீசி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசி உள்ளார்.
தான் உளவுத்துறை அதிகாரி எனக் கூறிய அந்த நபர், புகார் வந்திருப்பதாக மிரட்டி, ரூ. 7 லட்சம் பணம் பெற்றுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்து சம்பத் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்து உளவுத்துறை அதிகாரி என ஏமாற்றிய தாமோதரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திமுக நிர்வாகி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (49). தி.மு.க.வை சேர்ந்த சம்பத் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். சம்பத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் மத்திய உளவுத்துறை போலீஸ் அதிகாரி எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

உளவுத்துறை அதிகாரி
மேலும், "நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் வந்துள்ளது. நீங்கள் வருமானம் குறித்த கணக்கு காட்டவில்லை. தனியார் தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் வருகின்றன. உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உங்கள் கார், வீட்டை எல்லாம் ஜப்தி செய்து விடுவோம். எனக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் உங்களை அந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறேன்" என மிரட்டியுள்ளார்.

போலீசில் புகார்
இதையடுத்து அச்சமடைந்த சம்பத், போனில் பேசிய நபரை தண்டலம் பகுதிக்கு வரவழைத்து தனது டிரைவர் மூலம் ரூ.7 லட்சம் பணத்தை அளித்துள்ளார். அப்போது, டிரைவரிடம், வேறு யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து, மன உளைச்சலில் இருந்து வந்த சம்பத், பின்னர் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

7 லட்சம் பறித்தவர் கைது
அவரது புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் போனில் பேசியவரின் செல்போன் எண்னை ஆய்வு செய்து பூந்தமல்லி அருகே தலைமறைவாக இருந்து வந்த தாமோதரன் என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்தான் மத்திய உளவு துறை போலீசாக நடித்து சம்பத்திடம் ரூ.7 லட்சம் பறித்ததும் தெரியவந்தது. தாமோதரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் ரூபாய் 7 லட்சம் பணத்தில் ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை உல்லாசமாக செலவிட்டிருப்பது தெரியவந்தது.

வலைவீசித் தேடும் போலீஸ்
மேலும் அவரிடம் இருந்து மீதம் இருந்த பத்தாயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தாமோதரனுக்கு துணையாகச் செயல்பட்டு, தலைமறைவாக உள்ள திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சபரீஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications