படுக்கையறை, கிட்சன்.. ராகுல் காந்திக்காக காங். களமிறக்கிய 60 கேரவன்கள்.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
கன்னியாகுமரி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து நாளை நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில், அவருக்காக சகல வசதிகளுடன் கூடிய 60 கேரவன்கள் வந்துள்ளன.
நடைபயணத்தின் போது ராகுல் காந்தியும், பிற காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக இந்த கேரவன்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் நடைபயணம் நாளை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த இரண்டு மாதக்காலமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த நடைபயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை வந்தார் ராகுல்
'பாரத் ஜோடோ யாத்திரை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை 3,750 கிலோமீட்டருக்கு நடத்தப்படவுள்ளது. இத்தனை தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே கடக்கவுள்ளார். அவருடன் சுமார் 50 ஆயிரம் பேர் இந்த யாத்திரையில் கலந்துகொள்ள இருக்கின்றனர். மொத்தம் 150 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த நடைபயணத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார்.

நடைபயணத்தை தொடங்கும் மு.க. ஸ்டாலின்
சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து பேசும் ராகுல் காந்தி, நாளை காலை கன்னியாகுமரி செல்கிறார். தொடர்ந்து, மாலை 4 மணிக்கு தனது நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதி்ல தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதன் பிறகு நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி, இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் தங்குகிறார்.

60 கேரவன்கள்
இந்நிலையில், ராகுல் காந்தியும், அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்திற்கு வந்துள்ளன. இந்த 60 கேரவன்களும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த கேரவன்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும்.

சகல வசதிகள்
எங்கெல்லாம் இரவு ராகுல் காந்தியும் பாதயாத்திரை குழுவினரும் தங்குகிறார்களோ அங்கு இந்த கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. இந்த கேரவன்களில் ஏசியுடன் கூடிய படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும், தொலைக்காட்சி, கணிணி, லேப்டாப் போன்ற சாதனங்களும் இந்த கேரவன்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications