கோடீஸ்வர எம்.பி.. ‘திண்ணையில் படுத்து.. கையை தலைக்கு வைத்து’ அடடே.. ராகுல் இப்பவே ஜெயிச்சிட்டாராம்!
கன்னியாகுமரி : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வர எம்.பியான விஜய் வசந்த், ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போது திண்ணையில் படுத்துத் தூங்கும் புகைப்படம் தீயாகப் பரவி வருகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலையில் தொடங்கிய மூன்றாம் நாள் நடைபயணம் காலை 7 மணியளவில் நாகர்கோவிலில் தொடங்கியது. மதியம் ஓய்வெடுக்க புலியூர் குறிச்சியில் உள்ள தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு உள்ள திண்னை ஒன்றில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் ஓர் ஓரமாக ஓய்வெடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஒற்றுமை பயணம்
ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தை 7ஆம் தேதி மாலை கன்னியாகுமரியில் தொடங்கினார். ராகுல் காந்தியின் கையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியைக் கொடுத்து இந்த நடை பயணத்தை தொடங்கி வைத்தார். தேசியக் கொடியைப் பெற்ற பின்பு அங்கிருந்து 600 மீட்டர் நடை பயணத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி. பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் முழுவீச்சில் தொடங்கியுள்ளது ராகுல் காந்தியின் பிரமாண்ட நடை பயணம்.

காங்கிரஸ் நிர்வாகிகள்
இந்த நடை பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். காங். மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், யாத்திரையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயக்குமார், காங்கிரஸ் தமிழ்நாடு சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, எம்.பி.க்கள் விஜய் வசந்த், திருநாவுக்கரசர், செல்லகுமார், ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் நடைபயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

மூன்றாவது நாள்
இன்று காலை 6 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல் சுங்கான்கடை சந்திப்பு வரையும், காலை 6.30 மணிக்கு சுங்கான்கடை சந்திப்பு முதல் வில்லுக்குறி சந்திப்பு வரையும், காலை 7 மணிக்கு வில்லுக்குறி சந்திப்பு முதல் புலியூர்குறிச்சி சர்ச் வரையும் நடைபயணம் மேற்கொண்டார் ராகுல் காந்தி. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து புலியூர்குறிச்சி முட்டிடிச்சான்பாறை வரை உள்ள தூரத்தை 2 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து தனது காலை நடை பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

3 மணி வரை ஓய்வு
அதன்பிறகு மாலை 3 மணி வரை புலியூர்குறிச்சி சர்ச் பகுதியில் ஓய்வெடுத்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ராகுல் காந்தியுடன் நடை பயணத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களும் ராகுல் தங்கும் இடத்திலேயே தங்கி வருகின்றனர். இன்று ராகுல் புலியூர்குறிச்சி சர்ச்சில் ஓய்வெடுத்தபோது, கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜய வசந்த் அங்கிருந்த திண்ணையில் படுத்து ஓய்வெடுத்தார்.

திண்ணையில் ஓய்வெடுத்த கோடீஸ்வர எம்.பி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் போதெல்லாம், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் வேட்பு மனு விவரங்களில் குறிப்பிடும் சொத்து மதிப்பில் எப்போதும் முதலிடத்தில் இருப்பார் வசந்தகுமார். வசந்த் அன் கோ என்ற வணிக சாம்ராஜ்ஜியத்தின் அதிபரான அவர் கோடீஸ்வரராக இருந்தாலும், மக்கள் பணியில் ஆர்வம் கொண்டு அரசியலுக்கு வந்தவர். அவர் எம்.பியாக தேர்வாகி பின்னர் கொரோனா தொற்றால் மரணமடைந்த நிலையில், குமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக நின்று எம்.பியாக வென்றார் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்.

53 கோடி சொத்து
கடந்த எம்.பி இடைத் தேர்தலின்போது விஜய் வசந்த் தாக்கல் செய்த சொத்து விவரங்களின்படி, விஜய் வசந்த்துக்கு 40 கோடிக்கு அசையும் சொத்துகளும், 12 கோடிக்கு அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரது மனைவி, மகன், மகள் பெயர்களில் 3 கோடிக்கும் அதிகமான சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மொத்தமாக சுமார் 53 கோடி சொத்து மதிப்புகளைக் கொண்டவர் விஜய் வசந்த்.

தலைக்கு கையை வைத்து
அப்படிப்பட்ட கோடீஸ்வர எம்.பியான விஜய் வசந்த், ராகுல் காந்தியுடன் மேற்கொண்டுள்ள நடைபயண அலுப்பில், சர்ச் திண்ணையில் வெறும் தரையில் படுத்துத் தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது ஷூவை தரையில் கழற்றிப் போட்டுவிட்டு, தலைக்கு கையை வைத்து படுத்து ஓய்வெடுக்கிறார் விஜய் வசந்த். எவ்வளவு பெரிய கோடீஸ்வரர், வெயிலில் நடந்து, திண்ணையில் தூங்குகிறார் என வியக்கிறார்கள் பொதுமக்கள்.

ராகுல் ஜெயிச்சிட்டாரு
ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம் பாஜகவை அசைப்பது ஒரு பக்கம் என்றால், தனது கட்சியின் நிர்வாகிகளை வியர்வை பிசுபிசுக்க சாலையில் நடக்க வைக்கிறார், மக்களைச் சந்திக்க வைக்கிறார், இதுவே பெரிய வெற்றி, மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் கதர்ச்சட்டைக் கட்சியினர்.












Click it and Unblock the Notifications