காலையில தான் கல்யாணம் நடந்துச்சு.. ரிசப்ஷனில் மணப் பெண்ணுக்கு பளார்! போதையில் மிலிட்டரி மாப்பிள்ளை!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே காலையில் திருமணம் நடந்த நிலையில், இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை, புதுப் பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் மாப்பிள்ளையான இராணுவ வீரர் மீது குளச்சல் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காலையில் திருமண வாழ்வில் இணைந்த ஜோடி இரவில் மது போதையால் பிரிந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள ரீத்தாபுரம் ஒத்தப்பனவிளை பகுதியை சேர்ந்தவர் ரூபன். வயது இரணுவ வீரரான இவர் குமரி கேரளா எல்லை பகுதியான பாறசாலை அருகேயுள்ள இளஞ்சிறா விளாகம் பகுதியை சேர்ந்த 6 வயது இளம்பெண்ணை கழிந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

ஆரம்ப கால கட்டத்தில் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இராணுவ வீரர் ரூபனும் திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவமனையில் மருந்தாளுனர் வேலை பார்க்கும் அந்த இளம் பெண்ணும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் வேறு வழியின்றி இரு வீட்டார் சம்மதத்துடன் இராணுவ வீரரான ரூபனுக்கு அந்த இளம்பெண்ணுக்கும், திங்கள்கிழமை காலை இளம்பெண்ணின் சொந்த ஊரான இளம்சிறா விளாகம்பகுதியில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு இராணுவ வீரர் ரூபனின் ஊரான ரீத்தாபுரம் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் வீடு காணும் நிகழ்வில் பங்கேற்க பெண்ணின் தந்தை உட்பட உறவினர்கள் பெண்ணுக்கு தாய் வீட்டு சீதனமாக கட்டில் மெத்தை பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை புதிய கார் ஒன்றையும் கொண்டு வந்துள்ளனர். இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது மது போதையில் இருந்த இராணுவ வீரரான புதுமாப்பிள்ளை ரூபன் புதுப்பெண்ணை அவரது தந்தை முன் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதை தட்டிக் கேட்ட புதுப்பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களிடம் வம்பிழுத்து தகராறில் ஈடுபட்டு ரகளை செய்ததோடு புதுப்பெண்ணின் தந்தையையும் தாக்கியுள்ளார். இதனால் திருமண மண்டபமே களரோபமாக காட்சியளித்த நிலையில் புதுமாப்பிள்ளை ரூபன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து தனது மகளுடன் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு வந்து புற நோயாளியாக சிகிட்சை பெற்ற புதுப் பெண்ணின் தந்தை தேவரஜ் நள்ளிரவு மகளுடன் குளச்சல் காவல் நிலையம் சென்று தாக்குதல் சம்பவம் குறித்து புகாரளித்தளித்ததோடு மகளையும் இரவோடு இரவாக தனது வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் இராணுவ வீரரான புது மாப்பிள்ளை ரூபன் மீது பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகள் பேசி தாக்கியதாக 296(b), 115(2) ஆகிய இரு பிரிவுகளில் குளச்சல் போலீஸார் வழக்கு பதிவு செய்து காவல் புதுப்பெண்ணையும், அவரது தந்தையையும் தாக்கி தப்பியோடிய புதுமாப்பிள்ளையான இராணுவ வீரர் ரூபனை தேடி வருகின்றனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போதே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட புது மாப்பிள்ளை புதுப் பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கியதால் காலையில் திருமணத்தில் இணைந்த ஜோடி இரவில் பிரிந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இரு வீட்டாரும் இணைந்து பேசி தீர்க்கலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications
