கன்னியாகுமரி ஆர்த்தியுடன் அடிக்கடி செல்போனில் பேசிய காவலர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி தொழிலாளியை கொன்ற மகள் மற்றும் அவரது காதலனை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனிடையே அடிக்கடி பேசிய இரண்டு காவலர்கள் யார் என்பது குறித்தும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்த 46 வயதாகும் சுரேஷ்குமார் கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள். சுரேஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமாரை விட்டு அவருடைய மனைவி பிரிந்துவிட்டார். கையோடு தனது இளைய மகளையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார்.

இதனிடையே மூத்த மகளான 21 வயதாகும் ஆர்த்தி மட்டும் தனது தந்தையான சுரேஷ்குமாருடன் தங்கினார். இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி சுரேஷ்குமார் வீட்டில் அதிகமாக மது குடித்து விட்டு இறந்து கிடப்பதாக இளம் பெண் ஆர்த்தி, பூதப்பாண்டி போலீசாருக்கு அழைத்து தெரிவித்தார்.
உடனே கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கூலித்தொழிலாளி சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதனை தொடர்ந்து சுரேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்த போது தலையில் காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கூலித்தொழிலாளி சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் முடிவு செய்தனர். முதலில் போலீசாருக்கு சுரேஷ்குமார் மகள் ஆர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டது.
அந்த கோணத்தில் மகள் ஆர்த்தியிடம் விசாரணை நடத்திய போது, தனது தந்தை சுரேஷ் குமார் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் பேசியதால் அவரை கீழே தள்ளிவிட்டு கம்பால் அடித்து கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இருப்பினும் ஒரு பெண் மட்டும் தனியாக இந்த கொலையை செய்து விட முடியாது என சந்தேகமடைந்த போலீசார் ஆர்த்தியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தார்கள்.
அப்போது ஆர்த்திக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருந்ததை கண்டனர். அதில் தெரிசனங்கோப்பு வாட்ஸ்புரத்தை சேர்ந்த 47 வயதாகும் சுரேஷ் பாபு என்பவர் ஆர்த்தியிடம் அடிக்கடி பேசியதும் தெரிய வந்தது. இவர் ஆர்த்தியின் தந்தை சுரேஷ் குமாரின் நண்பர் ஆவார். சம்பவத்தன்று இரவு சுரேஷ் பாபுவும் சுரேஷ்குமாரும் வீட்டில் அமர்ந்து மது குடித்துள்ளனர். சுரேஷ் குமார் மது போதையில் மயங்கி தூங்கியவுடன் சுரேஷ்பாபு, ஆர்த்தியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது திடீரென கண்விழித்த சுரேஷ்குமார் அவர்களை கடுமையாக பேசி கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் பாபு அவரை கீழே தள்ளி விட்டு வயிற்றில் மிதித்து கழுத்தை நெரித்து கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து காதலன் சுரேஷ்பாபுவை போலீசார் கைது செய்தனர். கைதான இருவரையும் நீதிமன்றததில் ஆஜர்படுத்திய போலீசார், ஆர்த்தியை தக்கலை சிறையிலும், சுரேஷ் பாபுவை நாகர்கோவில் சிறையிலும் அடைத்தார்கள். இதற்கிடையே ஆர்த்தியின் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை போலீசார் ஆய்வு செய்த போது 2 போலீஸ் ஏட்டுகள் அடிக்கடி பேசியதாக தெரியவந்துள்ளது. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications