வாரிசு அரசியலா? யார் சொன்னாங்க.. அதிமுகவில் கிடையவே கிடையாது! உழைப்பவருக்கே உயர் பதவி.. இபிஎஸ் உறுதி
கரூர் : அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது எனவும், கட்சிக்காக உண்மையாகவே உழைப்பவர்களுக்கே உயர்பதவி என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வளையப்பட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது
பாப்பாசுந்தரம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் சின்னச்சாமி சிவபதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

வாரிசு அரசியல் கிடையாது
நிகழ்ச்சியில் பேசிய அவர், "அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. உழைக்கின்ற அனைவருக்கும் உயர் பதவி கிடைக்கும். அதிமுக, மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் கொடுத்தது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக அடிக்கல் நாட்டி பெருமை பேசி வருகிறது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு திமுக பெயர் சூட்டி வருகிறது. 11 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

தண்ணீர் பற்றாக்குறை
அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசும், திமுக அரசு கொடுத்த பொங்கல் பரிசும் எப்படி இருந்தன என்பது மக்களுக்குத் தெரியும். அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மையில் முதலிடத்தில் இருந்தோம். குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் நிரம்பியதால் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது.

திமுக அரசு மூடுவிழா
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது. அதிமுகவின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மகளிருக்கு இரு சக்கர வாகனம் ஆகிய திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தி வருகிறது" என அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications