கரூரில் பிரேக் பிடிக்காமல் சென்ற பேருந்து..இருசக்கர வாகனங்கள் சேதம் சிக்னலில் நின்றிருந்தவர்கள் கதி?
கரூர்: கரூர் பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டுநர் எவ்வளவு முயற்சித்தும் பேருந்து நிற்காமல் சிக்னலில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் மீது மோதியது. விபத்தில் இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்த நிலையில் இரண்டு இளைஞர்கள் சிறு காயங்களுடன் தப்பினர்.

நீதி கேட்டு போராட்டம்
கரூரில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதாக மாணவி ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகளும் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் அருகே போராட்டம் அடிக்கடி நடைபெறுவதால் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் சிவப்பு சிக்னல் போடப்பட்டபோது அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நிற்கத் தொடங்கின. அப்போது அந்த வழியே வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரேக் போட முயற்சித்தார். எவ்வளவு முயன்றும் பிரேக் பிடிக்காமல் முன்னால் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதி நின்றது. இதனால் பயந்து போன பயணிகள் அலறி அடித்து உடனடியாக பேருந்தை விட்டு இறங்கினர்.

2 பேர் காயம்
இந்த விபத்தில் 2 இளைஞர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போராட்டத்திற்கு காவல் இருந்த போலீசார் விபத்தை பார்த்தது உடனடியாக ஓடி வந்தனர். பேருந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் ஓட்டுநரை பேருந்தில் இருந்து இறங்க சொல்லிவிட்டு பின்னர் அந்த பேருந்து கரூர் நகர காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

பழுதான பேருந்து
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், இந்த நேரத்தில் வழக்கமாக வரும் நகரப் பேருந்து இது இல்லை என்றும், நகரப் பேருந்து பழுது காரணமாக மாற்றுப் பேருந்து அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் பழுதான பேருந்துக்கு பதிலாக பழுதான பேருந்தையே அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர். அதேசமயம் இப்பகுதியில் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு அடிக்க போராட்டம் நடைபெறுவதாகவும், ஒருவேளை போராட்டம் நடைபெறும்போது பேருந்து வந்திருந்தால், விபரீதம் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் கரூரில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications