“மிசன் 2024”.. பதவி வந்தவுடன் ஆள் வைத்து வேலை செய்யக்கூடாது- திமுகவினருக்கு செந்தில் பாலாஜி “ஆர்டர்”
கரூர்: திமுகவில் பதவியை வாங்கிக் கொண்டு ஆள் வைத்து வேலை செய்யக்கூடாது என்றும், தொண்டர்களை மதித்து நடந்துகொள்ள வேண்டும் எனவும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.
கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கோவை சாலையில் அமைந்து உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இதில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஒன்றிய, நகர கழக நிர்வாக பொறுப்புகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து இருக்கலாம். ஆனால், ஒருவர்தான் பொறுப்பாளராக இருக்க முடியும். பதவி கிடைக்காதவர்கள் பல்வேறு அணிகளில் பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுவார்கள்.

திமுக பொதுக்கூட்டம்
பொறுப்புகள் வேண்டும் என விருப்பப்படக் கூடியவர்கள் மாவட்ட திமுக அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு பதவிகளை வழங்குவது குறித்து ஆலோசித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அது குறித்து பரிந்துரை செய்யப்படும். கரூரில் வரும் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தொண்டர்களை மதிக்க வேண்டும்
இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொள்ள இருக்கிறார். கரூர் மாவட்டத்தில் 1047 வாக்குச்சாவடிகளில் பேராசிரியர் அன்பழகன் படம் வைத்து புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும். திமுகவில் சாதாரண தொண்டர்களாக இருந்தாலும், அவர்கள் நமது கட்சிக்காகவே பணியாற்றக் கூடியவர்கள். தொண்டர்களையும் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.

பதவி வாங்கிக்கொண்டு..
மண்டல நியமன பொறுப்பாளர்கள் 100 வாக்காளர்களிடம் நன்மதிப்பை பெற்றவர்களாக இருக்க வேண்டும். பதவி வாங்கிக் கொண்டு ஆள் போட்டு வேலை பார்க்க கூடாது. தொடர் வெற்றிகளை பெற கட்டுப்பாடுகள் மற்றும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். எவ்வாறு நகர்புர உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றோமோ அதே போன்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications