நாங்க ஆறுதல் சொல்ற நிலைமை.. குடும்பத்தில் ஒருத்தனா இருப்பேன்னாரு.. விஜய்யை சந்தித்த உறவினர் பேட்டி!
கரூர்: கரூர் கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் சந்தித்த நிலையில், அவர்களுடன் பேசியது என்ன என்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து விஜய்யை சந்தித்த ஒருவர் என்ன நடந்தது என்பதை விரிவாக கூறியுள்ளார். அதில் விஜய் மிகவும் வருந்தியதாகவும், ஒவ்வொரு குடும்பத்தையும் தனித் தனியாக சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் ஒரு மாதமாக விஜய் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் நேற்று கரூரில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தவெகவினர் மாமல்லபுரம் அழைத்து வந்தனர். அங்குள்ள தனியார் ரெசார்டில் வைத்து விஜய் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பொது நிகழ்வாக அல்லாமல் தனியார் நிகழ்வாகவே நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் விஜய் மனம் உடைந்து மன்னிப்பு கோரியதாகவும், இரு குடும்பத்தினரின் காலில் விழுந்து அழுததாகவும் தவெகவினர் சோசியல் மீடியாவில் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி சந்திரா என்ற பெண் உயிரிழந்தார். சந்திரா தரப்பில் இருந்து கணவர் தம்பியான முருகேசன் நேரில் சென்று விஜய்யை சந்தித்துள்ளார். விஜய்யை சந்தித்தது தொடர்பாக முருகேசன் பேசுகையில், விஜய் ரொம்ப வருத்தப்பட்டார்.. தன் குடும்பத்தில் இருவர் உயிரிழந்ததை போல் ரொம்ப ஃபீல் பண்ணார்..
என்ன சொல்வது.. வார்த்தைகளே இல்லை.. இப்படியாகிவிட்டது என்று ஃபீல் பண்ணாரு.. ஒரு 15 நிமிடங்கள் வரை விஜய்யுடன் பேசிவிட்டு வந்தேன்.. குழந்தைகள், படிப்பு செலவு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.. ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு இன்சூரன்ஸ் போட்டு கொடுப்பதாக கூறினார். உடனடியாக அண்ணனுக்கு இன்சூரன்ஸ் போட்டு கொடுத்தார்கள்.
உங்களின் குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.. நான் கட்டாயம் உங்களுடன் இருப்பேன் என்றார்.. பாதுகாப்பாக அழைத்து சென்று பாதுகாப்புடன் வந்தோம்.. ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக 15 முதல் 30 நிமிடங்கள் வரை சந்தித்து பேசினார். குறைகளை கேட்டறிந்து கொண்டார்.. விஜய் சாரே குடும்பத்தில் ஒருவராக நினைத்து என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்றார்.
அண்ணனின் பையன் ஒருவன் படிக்க சென்றுவிட்டு பாதியோடு நிறுத்திவிட்டான்.. அவனை மீண்டும் படிக்க வையுங்கள்.. கல்வி செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று விஜய் கூறினார். எங்கள் குடும்பத்தில் இருந்து 8 பேர் சென்றோம்.. விஜய்யை பார்க்கவே நமக்கும் கஷ்டமாகவே இருந்தது. அவரும் மனதளவில் உடைந்து போயிருக்கார்.. அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.
அந்த அளவிற்கு எனக்கு கஷ்டமாக இருந்தது.. எனக்கு கரூர் வர முடியாத சூழ்நிலை... உங்களை இங்கு வர வைத்துவிட்டேன் என்று தவறாக நினைத்து கொள்ளாதீங்க.. உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன்.. மனசு கஷ்டமா இருக்கு.. அதனால்தான் உங்களை வர வைத்தேன் என்றார்.. நாங்களும் உங்களை பார்க்கவே வந்தோம் என்றோம்.. கரூர் வருவது பற்றி நாங்கள் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications