வயிற்றிலேயே உயிரிழந்த சிசு... தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளித்தனரா?.. ஒசூரில் அதிர்ச்சி சம்பவம்
கிருஷ்ணகிரி: ஒசூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளித்த காரணமாக, கர்ப்பிணி வயிற்றிலேயே சிசு உயிரிழந்தாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு மருத்துவமனையில் அப்பகுதியிலேயே பெரிய மருத்துவமனையாக உள்ளது. சுமார் 260 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை மட்டுமல்லாது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினந்தோறும் புறநோயாளிகள், கர்ப்பிணிகள், உள்நோயாளிகள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய தர சான்றிதழ் பெற்ற இம்மருத்துவமனை அண்மையில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் ஜமிலாக்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கர்ப்பம் தரித்த முதல் மாதத்திலிருந்து ஜமிலாக்கான் ஒசூர் அரசு மருத்துவமனையில் மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு வந்திருக்கிறார்.
நிறைமாத கர்ப்பிணியான ஜமிலாக்கானுக்கு நவம்பார் 26ஆம் தேதி குழந்தை பேறுக்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், கடந்த 24ஆம் தேதியே அவர் ஒசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நாள் முதல், மருத்துவர்கள் யாரும் ஜமீலாக்கானை பரிசோதிக்காமலும், முறையான சிகிச்சை வழங்காமல் இருந்ததாகவும், பலமுறை வலியுறுத்தியும் செவிலியர்களின் தொலைபேசி வழிக்காட்டுதல்படி தூய்மை பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டதாக அப்பெண்ணின் உறவினர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில் ஜமிலாக்கானின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், நேற்றிரவு வயிற்றினுள் இருந்த குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை எடுத்துள்ளனர். ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சியம், துப்புறவு பணியாளர்களின் தவறான சிகிச்சை காரணமாகவே சிசு உயிரிழந்ததாகக் கூறி, மருத்துவமனை ஊழியர், செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
மேலும் குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்தும், ஜமிலாக்கானின் உடல்நிலை குறித்தும் தற்போது வரை மருத்துவர்கள் நேரில் வந்து விளக்கம் சொல்லவில்லை எனவும், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications