கிருஷ்ணகிரி மலைக்கோட்டையில் ஆடையின்றி தவித்த பெண்! 2000 அடி உயரத்தில் பாலியல் கொடுமை! நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைக்கோட்டையின் உச்சியில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருப்பத்தூரை சேர்ந்த 35 வயது ஆணும் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் சென்றனர்.

இந்த மலை 2000 அடி உயரத்தில் இருக்கிறது. அந்த தர்காவுக்கு சென்ற ஆணும் பெண்ணும் வழிபாடு நடத்திவிட்டு அங்கிருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்திருந்தனராம்.
மறைவான இடத்தில் மது
அப்போது அந்த பகுதியில் மறைவான இடத்தில் 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அவர்கள், இந்த இருவரையும் பார்த்துவிட்டனர். உடனே இவர்களை நோக்கி வந்தனராம். அப்போது அவர்களிடம், "இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என கேட்டனராம். அதற்கு அவர்கள் இருவரும், "நாங்கள் வெளியூரை சேர்ந்தவர்கள், இங்குள்ள தர்காவுக்கு சுவாமி கும்பிட வந்தோம்" என தெரிவித்தனர்.
மடக்கிய கும்பல்
மேலும் அவர்கள் குடித்திருந்ததை அறிந்த ஆணும் பெண்ணும், அங்கிருந்து நகருவதற்கு முயற்சித்தனராம். அப்போது அந்த போதை கும்பல் அவர்களை மடக்கினராம். உடனே அந்த 4 பேரும் சேர்ந்து அந்த ஆண் நபரை கடுமையாக தாக்கிவிட்டனராம். அவரது ஆடையை கழற்றி இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண்கயிறையும் கத்தியால் அறுத்தனராம்.
கத்தியை காட்டி மிரட்டல்
பிறகு, அந்த பெண்ணை நோக்கி திரும்பிய கும்பலை கத்தியை காட்டி அவரிடம் இருந்த தங்க நகைகளை பறித்துவிட்டனராம். மேலும் அந்த பெண்ணின் ஆடைகளையும் களைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆடையில்லாத வீடியோ
பிறகு இருவரையும் ஆடையின்றி இருக்கும் வீடியோவை எடுத்துக் கொண்ட ஆசாமிகள், அந்த ஆணின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ 7 ஆயிரத்தை தங்கள் கணக்கில் செலுத்திக் கொண்டனராம். மேலும் அந்த கும்பலில் இருந்த கலையரசனும் அபிஷேக்கும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனராம்.
அதையும் வீடியோ எடுத்து கொண்ட அவர்கள், "இந்த விவகாரம் குறித்து வெளியே சொன்னால், நீங்கள் துணி இல்லாமல் இருந்ததையும் பாலியல் தொல்லையையும் இன்டர்நெட்டில் விட்டுவிடுவோம்" என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்ற இவர்கள் ஆளுக்கொரு பைக்கில் தப்பிவிட்டனராம்.
அழுத பெண்
இதனிடையே ஆணும் பெண்ணும் அழுதுக் கொண்டே மலையில் இருந்து இறங்கி வந்த நிலையில் அங்கிருந்தவர்களிடம் தங்களுக்கு நடந்தது என்ன என்பதை தெரிவித்தனராம். அப்போது அவர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
4 பேர் கைது
இந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி போலீஸார் தனிப்படை அமைத்து 4 பேரையும் தேடி வந்தனர். அப்போது மலைக்கோட்டையில் இருந்த செல்போன் சிக்னலை வைத்து தவறு செய்தவர்களை போலீஸார் நெருங்கினர்.
அவர்கள் கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த கலையரசன், அபிஷேக், சுரேஷ், நாராயணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து கலையரசன், அபிஷேக்கை வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து நேற்று அவர்களை பிடிக்கச் சென்றனர்.
சுட்டு பிடித்த போலீஸ்
போலீஸாரை கண்டதும் சுரேஷ், நாராயணன் ஆகியோர் தப்பியோட முயன்றனர், அப்போது அவர்களில் ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications