லிஸ் டிரஸ் ராஜினாமா.. கட்சியை காப்பாற்ற ரிஷி சுனக் உதவியை நாடும் போரிஸ்! இங்கிலாந்து நிலை மாறுமா?
லண்டன்: இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ் பதவியேற்ற 45 நாட்களிலேயே ராஜினாமா செய்துள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அடுத்த பிரதமராக முன்னாள் நிதியமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த 'ரிஷி சுனக்' தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கட்சியை காப்பாற்ற மீண்டும் தான் பிரதமராக பொறுப்பேற்க இருப்பதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

புதிய பிரதமர்
கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன. மக்கள் இதனைக் கட்டுப்படுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த பிரதமராக யார் தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு லிஸ் டிரஸ், ரிஷி சுனக், பென்னி மோர்டான்ட், பென் வாலஸ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

கணிப்பு
இதனையடுத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் டிரஸ், வெற்றி பெற்றார். ஆனால், அவர் அறிவித்த திட்டங்கள் மற்றும் சலுகைகள் நாட்டின் பிரச்னையை தீர்க்காமல் மேலும் அதிகரித்தது. இதன் விளைவாக 45 நாட்களில் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அடுத்த பிரதமர் யார் என்கிற கேள்வியெழுந்துள்ளது. இங்கிலாந்தின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரில் முதல் இருவர் பிரதமராக பதவி வகித்து ராஜினாமா செய்துவிட்டனர். எனவே மூன்றாவது இடத்தில் இருக்கும் ரிஷி சுனக்கிற்கு அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று 'புக்மேக்கர்ஸ்' எனும் நிறுவனம் கணித்திருக்கிறது.

பலவீனம்
இவ்வாறு இருக்க, கட்சி பலவீனமடைந்துள்ளதாகவும், எனவே இதனை மீட்டெடுக்க தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளதாக 'டெலிகிராப்' கூறியுள்ளது. முன்னதாக லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்றபோது புதிய பட்ஜெட் ஒன்றை தாக்கல் செய்தார். இதில் பணக்காரர்களுக்கு அதிக வரிச்சலுகையை அறிவித்தார். இதன் மூலம் பணக்காரர்கள் தாங்கள் நடத்தும் நிறுவனத்தில் மேலும் அதிக முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

தேர்தல்
இதனால் வரிப்பணம் செலவானது மட்டுமே மிச்சம். மக்கள் தங்கள் கைகளில் போதிய அளவு வருமானம் இல்லாமல் மீண்டும் வீதிக்கு இறங்கி போராடத் தொடங்கினர். இப்படியாக ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சிகள் மாறாத நிலையே இருப்பதால் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு சரிய தொடங்கி இருக்கிறது. இதனை குறிப்பிட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இக்கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக தேர்தல் நடக்காவிட்டாலும் கூட எதிர்வரும் 2024ம் ஆண்டு மீண்டும் அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

ஆதரவு
இதற்குள் கட்சியின் சரிந்த செல்வாக்கை மீட்டெடுக்க தான் மீண்டும் பிரதமராக வேண்டும், இதற்கு ரிஷி சுனக்கின் ஆதரவு வேண்டும் என கட்சிக்குள் போரிஸ் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியாயினும் இருக்கும் நிலையில் வரும் வெள்ளிக் கிழமைக்குள் அடுத்த பிரதமரை கட்சி தேர்ந்தெடுத்துவிடும். இதற்கான தேர்தலில் ரிஷிக்கு 100 எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் போரிஸ் ஜான்சனுக்கு 48 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. எனவேதான் ரிஷியின் உதவியை போரிஸ் நாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications