"என்னை மன்னித்து விடுங்கள்".. வெளியுறவுத்துறை போட்ட போடு.. திமிராக பேசி இந்தியாவை சீண்டிய லலித் மோடி கெஞ்சல்
லண்டன்: முன்னாள் ஐபிஎல் தலைவரான லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் உள்ளார். இவர் விஜய் மல்லையவுடன் சேர்ந்து இந்தியாவை சீண்டும் வகையில் வீடியோ வெளியிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் லலித் மோடி இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை போட்ட போடால் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
ஐபிஎல் நிறுவன தலைவராக இருந்தவர் லலித் மோடி. அதேபோல் ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளரும், தொழிலதிபராக இருந்தவர் விஜய் மல்லையா. இவர்கள் மீது தனித்தனியாக பல முறைகேடு புகார்கள் உள்ளன. இருவர் மீதும் வங்கியில் கடன் வாங்கி முறைகேடு செய்தது, நிதி முறைகேடு செய்தது என்று தனித்தனியாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

சிபிஐ உள்பட பல விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டை இருவருமே மறுத்து வருகின்றனர். இதற்கிடையே தான் கைது நடவடிக்கைக்கு பயந்து லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் வெளிநாட்டுக்கு ‛எஸ்கேப்' ஆகினர்.
நிதி முறைகேடு தொடர்பான விசாரணை கடந்த 2010ம் ஆண்டில் தொடங்கியதுமே லலித் மோடி வெளிநாடு சென்றார். அதேபோல் விஜய் மல்லையாவும் லண்டனுக்கு சென்றார். இவர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடர்ந்து வருகிறது. இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே தான் விஜய் மல்லையா டிசம்பர் 18 ம் தேதி தனது 70வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார். இந்த விழாவில் லலித் மோடி பங்கேற்றார். அப்போது லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதில் லலித் மோடி, விஜய் மல்லையாவுடன் இருந்தார்.
அந்த வீடியோவின் கேப்ஷனில் "இன்டர்நெட்டை மீண்டும் புரட்டிப் போட நான் ஏதாவது செய்யட்டுமா. என் நண்பர் விஜய்மல்லையாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். லவ் யூ." என்று கூறியிருந்த லலித் மோடி, ‛‛நாங்கள் தான் இந்தியாவில் இருந்து தப்பியோடியவர்கள். இந்தியாவில் இருந்து ஓடிவந்த பெரிய நபர்கள் நாங்கள் தான்'' என்று சிரித்தபடி குறிப்பிட்டு இருந்தார்.
வீடியோவில் விஜய் மல்லையா இளம்பெண் ஒருவருடன் கையில் மது குவளையுடன் இருந்தார். இந்தியாவை சீண்டும் வகையில் லலித் மோடி, விஜய் மல்லையா உடன் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தி சட்டப்படி சிறையில் அடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறினர். இதுபற்றி நம் வெளியுறவுத்துறை அமைச்சகமும் விளக்கம் அளித்தது.
இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையி்ல, ‛‛தேடப்படும் நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இவர்களை நாடு கடத்துவது தொடர்பாக பல அரசுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான செயல்முறைகளும் நடந்து வருகிறது'' என்றார்.
இதுதொடர்பாக லலித் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛யாருடைய உணர்வுகளையும், குறிப்பாக இந்திய அரசின் உணர்வுகளை நான் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இந்திய அரசாங்கத்தின் மீது எனக்கு அளவற்ற மரியாதையும், அன்பும் உண்டு. நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை நான் மன்னிப்பு கோருகிறேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications