தேர்தல் அறிவிப்பு வந்த மறுநொடி.. ராஜினாமா செய்துவிட்டு ஓடிய 78 எம்பிக்கள்.. கையை பிசையும் ரிஷி சுனக்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் திடீரென சுமார் 80 எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். வரும் ஜூலை 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் கடந்த 2022 முதல் பிரதமராக இருப்பவர் ரிஷி சுனக்.. அடுத்தடுத்து இரு பிரதமர்கள் விலகி, பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமான சூழலில் இருந்த போது பிரதமராகப் பதவியேற்றவர் ரிஷி சுனக்.

அதன் பிறகு அவர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பிரிட்டன் பொருளாதாரம் சற்று மேம்பட்டுள்ளது. இருப்பினும், நிலைமை முழுமையாகச் சீராகாததால் அந்நாட்டு மக்கள் கோபத்தில் தான் உள்ளனர்.
பிரிட்டன் நாடாளுமன்றம்: தற்போதுள்ள பிரிட்டன் நாடாளுமன்றம் அடுத்தாண்டு தொடக்கத்தில் தான் நிறைவடைகிறது. அதாவது அடுத்தாண்டு வரை தேர்தல் நடத்தத் தேவையில்லை.. இருப்பினும், ரிஷி சுனக் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துத் தேர்தலை அறிவித்துள்ளார். அதன்படி அங்கு வரும் ஜூலை 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமரான ரிஷி சுனக் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் ரிஷி சுனக் தீவிர பிரச்சாரத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வந்த முதல் வாரம் அவர் ஆலோசகருடன் சீக்ரெட் மீட்டிங்கை நடத்தியுள்ளார். இதற்கு அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழலே காரணமாகும். அதாவது தேர்தல் அறிவிப்பு வந்த உடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இருந்து பல எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், பலரும் தேர்தலில் சீட் வேண்டாம் என்றும் சொல்கிறார்களாம்.
ரிஷி சுனக்: பிரிட்டன் பொருளாதார நிலைமை உள்ளிட்ட காரணங்களால் ரிஷி சுனக் மீதும் இப்போது ஆளும் கட்சியாக உள்ள ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுவரை நடந்த அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ரிஷி சுனக் கட்சிக்கு படுதோல்வி கிடைக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அங்கு மூத்த எம்பிக்கள், அவ்வளவு ஏன் அமைச்சர்கள் கூட சீட் வேண்டாம் என சிதறி ஓடுகிறார்கள்.
ரிஷி சுனக் அமைச்சரவையில் இருந்த மைக்கேல் கோவ் மற்றும் ஆண்ட்ரியா லீட்சம் ஆகியோரும் சீட் வேண்டாம் என அறிவித்து உள்ளனர். இதுவரை கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து சுமார் 78 பேர் தங்களுக்கு சீட் வேண்டாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூத்த நிர்வாகிகள் பலரும் தேர்தலில் இருந்து விலகியுள்ளதால் ரிஷி சுனக் இக்கட்டான சூழலில் இருக்கிறார்.
ஆலோசனை: நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி உறுதி என்றாலும் அது ஒரு கவுரமான தோல்வியாக இருக்க வேண்டும் என்பதே கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், தற்போது வரும் சர்வேக்களை வைத்துப் பார்க்கும் போது அது மிக மோசமான ஒரு தோல்வியாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகளால்தான் கவலையடைந்த ரிஷி சுனக் பிரச்சாரத்தைத் தவிர்த்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சர்வே: அதேநேரம் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அங்குத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தொழிலாளர் கட்சி கடைசியாக 2005இல் பிரிட்டனில் வென்று இருந்தது. அதன் பிறகு அங்கு தொடர்ச்சியாக கன்சர்வேடிவ் கட்சியே வென்ற நிலையில், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை வந்த சர்வேக்களில் தொழிலாளர் கட்சிக்கு 44% ஆதரவும் கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவு 22%ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications