புதிய தொழிற்சாலைகள்.. உத்தரப் பிரதேசத்தில் அதிகரிக்கும் முதலீடுகள்! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில், மின்சார வாகனங்களுக்கு தேவையான சார்ஜர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று விரைவில் அமைய இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது போடப்பட்டிருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் யோகி, "உ.பி மின்சார வாகனங்கள், சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகளின் உற்பத்தி மையமாக மாறுவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச அரசும், டெல்லியைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் சார்ஜர் தயாரிப்பு நிறுவனமான சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனமும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த தொழிற்சாலை ரூ.3,000 கோடி முதலீட்டில் வர இருக்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த உற்பத்தி ஆலை ஒவ்வொரு ஆண்டும் 10,000 EV DC ஃபாஸ்ட் சார்ஜர்களை தயாரிக்கும். இப்படி தயாரிக்கப்படுவது உள்நாட்டில் விற்பனைக்கும், வெளிநாடுகளில் ஏற்றுமதியும் செய்யப்படும்.

இது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இந்த சார்ஜர் உற்பத்தி மூலம் நாம் பசுமையான சூழலுக்கு பங்களிக்கிறோம். உத்தரப் பிரதேசம் மின்சார வாகனங்கள், சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகளின் உற்பத்தி மையமாக மாறுவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் முன்னணி EV உற்பத்தி மையமாக மாற்றும். இந்த ஆலை கணிசமான எண்ணிக்கையிலான வேலைகளை உருவாக்கும் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே உத்தரப் பிரதேச மாநிலம் மின்சார வாகனங்களை நோக்கி தீவிரமாக நகர்ந்திருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்காக சில திட்டங்களையும் மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதாவது மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர வட்டியில்லா கடனும் வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் மின்சார வாகனங்கள் தொடர்பான முதலீட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications