பாஜகவை கடுமையாக சாடும்.. டேனிஷ் அலி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்.. மாயாவதி அதிரடி
லக்னோ: பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் டேனிஷ் அலி எம்பியை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து அதன் தலைவர் மாயாவதி இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். இவரது கட்சியை சேர்ந்தவர் டேனிஷ் அலி. இவர் உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளர்கள் அதிகமாக வெற்றி பெற்ற நிலையில் டேனிஷ் அலி அந்த தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருந்த குன்வார் சிங் தன்வாரை 63 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.
அதோடு பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவராக உயர்ந்தார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் லோக்சபா தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் நாடாளுமன்ற கூட்டம் நடந்தது. அப்போது சந்திரயான் -3 திட்டம் வெற்றி பற்றிய விவாதத்தின்போது டேனிஷ் அலி பங்கேற்றார். இந்த வேளையில் பாஜகவின் எம்பி ரமேஷ் பிதூரி நாடாளுமன்றத்திலேயே தீவிரவாதி என கூறினார். இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக எம்பி ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேனிஷ் அலி உள்பட எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்தலை. இதற்கிடையே தான் டேனிஷ் அலி தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் தான் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி டேனிஷ் அலியை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரான அறிக்கைகள் மற்றும் செயல்களால் பலமுறை உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறீர்கள். இதனால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறீர்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி டேனிஷ் அலியிடம் கேட்டபோது, ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் முடிவு என்பது துரதிர்ஷ்டவசமானது. நான் ஒருபோதும் கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டது இல்லை. இதற்கு எனது அம்ரோஹாவின் மக்களே சாட்சி. பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை நான் எதிர்த்தேன், அதைத் தொடர்ந்து செய்வேன். இதைச் செய்வது குற்றம் என்றால், நான் அதனை குற்றமாக செய்தேன் என்றால் அதற்கான தண்டனையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என காட்டமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications