‛ராமர் கோவிலுக்காக உயிர் தியாகம்’.. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் குடும்பம்
லக்னோ: அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க வேண்டும் என அரசியல் தலைவர்களுக்கும், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்தில் உயிர் தியாகம் செய்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 50 பேரின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இதற்காக பலருக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 1980ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணத்தில் ராமர் - சீதையாக நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் அருண் கோவில் - நடிகை தீபிகா சிக்லியா ஆகியோருக்கும், 4,000 துறவிகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்பிதழில் கோயிலின் பிரமாண்ட தோற்றம் மற்றும் குழந்தை ராமரின் அழகிய புகைப்படத்துடன், ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்ற முக்கிய நபர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய கையேடு இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ்கள் மேற்குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமல்லாது, ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 50 பேரின் குடும்பத்தினருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்பது தொடங்கி, ராமர் கோயில் கட்டுவது வரை ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.












Click it and Unblock the Notifications