டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துகுடி ஜூஸ்.. உ.பியில் அவலம்..நோயாளி பலி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 'பிளாஸ்மா' வழங்குவதற்கு பதில் சாத்துக்குடி சாறு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வீடியோக்கள் வெளிவந்ததையடுத்து உண்மையை கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று உத்தரப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்னர் போலி ரத்த வங்கி ஒன்று இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாத்துக்குடி சாறு
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜின் குளோபல் மருத்துவமனையில் ரத்தம் பெற்றுக்கொண்டிருந்த டெங்கு நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமாக இம்மாதிரியான உயிரிழப்புகள் நடக்கும் என்றாலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர். அதாவது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள 'பிளாஸ்மா' வழங்கப்படுவதற்கு பதில் சாத்துக்குடி சாறு கொடுக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொசுக்கடி
இது தொடர்பாக வீடியோ எடுத்துள்ள நபர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் டெங்கு நோய்கள் அதிக அளவில் உருவாகின்றன. நன்னீரில் வசிக்கும் 'ஏடிஎஸ்' வகை கொசுக்கள் சுமார் மூன்று வாரங்கள் வரை உயிர் வாழும். இந்த கொசுக்களின் கால்களில் வெள்ளை கோடுகள் இருப்பதால் இது புலிக்கொசு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை கொசுக்கள் பகல் பொழுதுகளில் மட்டுமே கடிக்கும். இந்த கொசுக்கள் டெங்கு பாதித்தவர்களை கடித்துவிட்டு மற்றவர்களை கடிக்கும் போது நோய் பரவுகிறது.

சிகிச்சை
இதில் என்ன சிக்கல் என்றால், இந்த கொசுவின் முட்டைகள் நீர் இல்லாமல் இருந்தால் சுமார் ஓராண்டு வரை உயிரோடிருக்கும். இதனையடுத்து மழைக்காலங்களில் மழை பெய்த பின்னர் அந்த தண்ணீர் மூலம் உயிர் பெற்று இந்த முட்டைகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகும். இப்படியாக பரவும் கொசுக்கள் டெங்குவை ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு கடத்துகிறது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களின் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைய தொடங்கிவிடும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 3 லட்சம் ரத்த தட்டணுக்கள் இருக்கும். ஆனால், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் சரிய தொடங்கும்.

ரத்த தட்டணுக்கள்
இதில் சோகம் என்னவெனில் டெங்கு காய்ச்சலுக்கு என்று எவ்வித தனி சிகிச்சை முறையும் கிடையாது. காய்ச்சலை போக்க பாராசிட்டமால் போன்ற மாத்திரரையும், உடல் வலியை குறைக்க சில மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. ரத்த தட்டணுக்கள் குறைவதை தடுக்க ரத்த தட்டணுக்கள் கொண்ட ரத்தத்தை ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றத் தவறினால் ரத்த தட்டணுக்கள் குறைந்து நுரையிரல் பகுதியில் நீர் தேங்கும். இது உயிரிழப்பை ஏற்படுத்திவிடும் இதனை 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' என்று அழைப்பார்கள். இந்த முறையில்தான் பிரயாக்ராஜின் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்துள்ளார்.

விசாரணை
இது தொடர்பாக அவரது உறவினர் எடுத்த வீடியோ பரவலாக பகிரப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறிய ஒரு குழு உருவாக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், குழு விசாரணையை முடித்த பின்னரே குற்றச்சாட்டு உண்மையா என்று தெரியவரும் என அம்மாநில துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications