பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் பாரபட்சம் இன்றி ஏழைகளை சென்றடைகிறது: அமைச்சர் ஜிதேந்திர சிங்!
லக்னோ: பிரதமர் மோடியின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக நடந்து வருவதாகவும், அவரது திட்டங்கள் அனைத்தும் எந்தவித பாரபட்சமும் இன்றி ஏழை மக்களை சென்றடைகிறது என்றும் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி நகரில் பஞ்சாயத் ராஜ் அமைப்பினருடன் மத்திய பணியாளர் நலன் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாடினார்.
மாவட்ட வளர்ச்சி கவுன்சில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி கவுன்சில் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

மோடியின் நலத்திட்டங்கள்
பிரதமர் மோடி கொண்டு வரும் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் உங்கள் பஞ்சாயத் ராஜ் அமைப்பு அலுவலர்களும் அதன் பிரதிநிதிகளும் முக்கியமானவர்கள். கடந்த 8 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அடித்தட்டு மக்கள் மற்றும் வரிசையில் நிற்கும் கடைசி நபர் வரை கொண்டு சேர்ப்பதில் முக்கியமான பங்கு வகிக்க மாவட்ட கவுன்சில் மற்றும் வட்டார கவுன்சில் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

கழிப்பறை, வீடுகள்
பஞ்சாயத்து தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முக்கிய பங்காற்ற வேண்டும். மக்கள் நலனுக்காக கொண்டு வரப்படும் திட்டங்களில் பயனாளிகள் யாரும் விடுபட்டுவிடாதபடி மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற போது நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கழிப்பறை, வீடுகள், தடுப்பூசிகள், மின்சாரம், வங்கி கணக்குகள் இன்றி இருந்தனர்.

உலக அளவில் முன்னணி நாடாக மாற்ற
கடந்த 8 ஆண்டுகளில் 100 சதவீத இலக்கை மத்திய அரசு நெருங்கியுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலக அளவில் முன்னணி நாடாக மாற்ற புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா, அவாஸ் யோஜனா, கிஷன் சம்மன் நிதி யோஜனா உள்ளிட திட்டங்கள் எல்லாம் அரசியல் பாரபட்சம் இன்றி அனைவரையும், தேவைப்படும் ஒவ்வொரு நபரையும் சென்றடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எந்த பாரபட்சமும் இன்றி
தொடர்ந்து அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ''கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள், எந்த பாரபட்சமும் இன்றி தேவைப்படும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருப்திப்படுத்தும் அரசியல் கட்டற்ற அளவில் இருந்த கடந்த காலங்களை போல் அல்லாமல் தற்போது சாதி, இன, மத பாகுபாடு என எந்த பாரபட்சமும் இன்றி நலத்திட்டங்கள் உரியவர்களை சென்றடைந்துள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications