இது என்ன பாகிஸ்தானா? வாக்காளர்களுக்கு போலீசார் இடையூறு.. கொந்தளித்த அகிலேஷ் யாதவ்
லக்னோ: யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று வாக்காளர்களை போலீசார் நிர்பந்திப்பதாக விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ், தேர்தல் ஆணையத்தை சுதந்திரமாக செயல்பட பாஜக அனுமதிக்க வேண்டும் என்றும் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
குஜராத் சட்டமன்றத்திற்கான இரண்டம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
அதேபோல், 5 மாநிலங்களில் காலியாக இருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மெயின்புரி மக்களவை தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா.. மெரினா மரப்பாதையில் முகாமிட்ட ஜோடிகள்! லத்தியுடன் நிற்கும் போலீசார்!

மெயின்புரி தொகுதிக்கு இடைத்தேர்தல்
உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் எம்.பியாக இருந்த முலாயம் சிங் மறைவால் இந்த மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால், மிகுந்த எதிபார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தொகுதியில் முலாயமின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஓட்டு போட விடாமல் போலீசார் தடுப்பதாக
அதுபோக உத்தர பிரதேசத்தின் ராம்பூர் சதர் மற்றும் கதாலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களை ஓட்டு போட விடாமல் போலீசார் தடுப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

வீடியோ ஆதாரங்கள் உள்ளன
ராம்பூர் தொகுதியில் வாக்காளர்களை ஓட்டு போட விடாமல் போலீசார் தடுக்கின்றனர். வாக்காளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் யாருடைய உத்தரவின் கிழ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பல இடங்களில் இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மக்களை ஓட்டு போடுவதற்கு போலீசார் அனுமதி மறுக்கின்றனர். இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

குஜராத்தில் பாஜக தோல்வி அடையும்
இதுபோன்ற நடவடிக்கைகள் என்ன மாதிரியான ஒரு தோற்றத்தை உலகத்திற்கு கொடுக்கும். இது என்ன பாகிஸ்தானா? பாஜகவினர் இந்த நாட்டை பாகிஸ்தானை போல மாற்ற முயற்சிக்கின்றனர். மெயின்புரியிலும் இதே நிலைதான் உள்ளது. பாஜகவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுபானம் வரை விநியோகம் செய்கின்றனர். குஜராத்தில் பாஜக தோல்வி அடையும் என்று நான் நம்புகிறேன். மெயின்புரி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜவாடி கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய அமைப்புகளை (தேர்தல் ஆணையம்) சுதந்திரமாக பணியாற்ற பாஜக அனுமதி அளிக்க வேண்டும். பாஜக மத்திய அமைப்புகளை முறைகேடாக பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல்
உத்தர பிரதேச மாநிலத்தின் ராம்பூர் சதர் மற்றும் கதாலி ஆகிய தொகுதிகளை தவிர.. ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்தார்ஷாகர் , பீகாரில் உள்ள குரானி, சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பனுபிரதாப்பர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.