இஸ்லாமிய சமூகத்தின் முதல் பெண் போர் விமானி.. இந்தியாவுக்கு மற்றொரு சானியா மிர்சா! உற்சாகத்தில் உ.பி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தை சானியா மிர்சா எனும் இளம்பெண் ஒருவர் NDA தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் இரண்டாவது போர் விமானியாகவும், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த முதல் போர் விமானியாகவும் தேர்வாகியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள ஜசோவர் கிராமத்தை சேர்ந்தவர் ஷாகித் அலி. இவர் டிவி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது மகள் சானியா மிர்சாவுக்கு போர் விமானியாக வேண்டும் என்று கனவு இருந்திருக்கிறது.
நாட்டின் முதல் பெண் போர் விமானியான அவ்னி சதுர்வேதி குறித்து சானியா மிர்சா அடிக்கடி பேசி வந்துள்ளார். மகளின் கனவை புரிந்துகொண்ட தந்தை அவர் விருப்பத்திற்கு ஏற்ப வழிநடத்தினார்.

இரண்டாவது விமானி
இவ்வாறு இருக்கையில் தேசிய பாதுகாப்பு அகாடமி 2022ம் ஆண்டுக்கான விமானப்படை வீரர்களுக்கான தேர்வை அறிவித்தது. இதில் மொத்தம் 400 இடங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் 19 இடங்கள் பெண்களுக்கானது. ஆனால் வெறும் 2 இடங்கள் மட்டுமே போர் விமானிக்கானதாகும். எனவே சானியா இந்த இரண்டு இடங்களை குறித்து வைத்தார். இந்த தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவரது தந்தை செய்து கொடுத்துள்ளார். எந்த பெரிய பின்புலமும் இல்லாமல் வந்த சானியா இந்த தேர்வில் வெற்றி பெற்று நாட்டின் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த முதல் பெண் போர் விமானியாக உருவெடுத்துள்ளார். மட்டுமல்லாது நாட்டின் இரண்டாவது பெண் போர் விமானியும் இவர்தான். இந்த வெற்றியை அவர்களின் கிராமம் முழுவதும் கொண்டாடுகின்றனர். சானியா மிர்சா வரும் 27ம் தேதி புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைகிறார்.

பயிற்சி
இது குறித்து அவரது தந்தை கூறுகையில், "எனது மகள் எப்போதும் போர் விமானம் குறித்துதான் பேசிக்கொண்டிருப்பார். அதைத் தவிர அவளுக்கு வேறு எதிலும் ஆர்வம் கிடையாது. அவளின் முயற்சிக்கு எங்களால் முடிந்ததை நாங்கள் செய்திருக்கிறோம். தற்போது எதிர்பார்த்தபடியே போர் விமானியாக தேர்வாகியுள்ளார்" என்று கூறினார். சானியா மிர்சா ஜசோவர் கிராமத்தில் உள்ள சிந்தாமணி துபே பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அதன் பின்னர் மிர்சாபூரில் உள்ள குருநானக் பெண்கள் கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு முடித்துள்ளார். இவர் 12ம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியாவார். இதனையடுத்து செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

பெருமிதம்
இந்த வெற்றி குறித்து சானியாவின் தாய் தபசும் மிர்சா கூறுகையில், "இந்த வெற்றி மூலம் எங்கள் கிராமத்தை பெருமைகுரியாதாக அவள் மாற்றிவிட்டாள். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். இங்குள்ள மற்ற குழந்தைகளுக்கு இவள் தற்போது ஒரு ரோல் மாடல் ஆகிவிட்டாள். இந்த தேர்வில் 2 இடங்களில் முதல் இடத்தை பிடிக்க முயன்றாள். ஆனால் அது தவறிப்போனது. எனவே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் நிச்சயம் சாதிப்பாள் என்று எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்" என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

முதல் விமானி
இந்திய விமானப்படையில் ரபேல், சுகோய், மிக் -29, மிக் -21, மிராஜ் 2000, ஹாக்கர் டெம்பெஸ்ட், ஃபோலண்ட் க்னாட், HAL HF 24, என மொத்தம் 1850க்கும் அதிகமான போர் விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. உலகின் மிகவும் பலம் வாய்ந்த விமானப்படை பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து இந்தியாதான் இருக்கிறது. இந்திய விமானப்படையில் மட்டும் சுமார் 1,39,576 வீரர்கள் பணியாற்றுகிறார்கள். இவ்வளவு பெரிய விமான படையின் முதல் பெண் விமானியாக அவ்னி சதுர்வேதி கடந்த 2018ம் ஆண்டு பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications