தீவிரவாதிகளுக்கு மதரஸாக்களுடன் தொடர்பு.. உடனே அப்புறப்படுத்துங்கள் - உ.பி அமைச்சர் சர்ச்சை பேச்சு
லக்னோ: தீவிரவாதிகளுக்கு மதரஸாக்களுடன் தொடர்பு உள்ளது என்றும், இந்துக் கோயில்களுக்கு அருகே உள்ள மசூதிக்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷத் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அரசு அமைந்தது முதலாகவே, அம்மாநிலத்தில் முஸ்லிம் மதத்தினர் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பசு மாடுகள் வளர்க்கும் முஸ்லிம்களை பசு கடத்தலில் ஈடுபடுவதாக கூறி அடித்துக் கொல்வது, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது போன்ற செயல்கள் அங்கு அதிகரித்து வருகின்றன.

முஸ்லிம் பெண்களுக்கு மிரட்டல்
குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு கூட இந்து சாமியார் ஒருவர், முஸ்லிம் பெண்களை பொது இடத்தில் வைத்து பலாத்காரம் செய்வேன் என பட்டப்பகலில் திறந்த வேனில் கூறிவிட்டு சென்றார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர் இவ்வாறு கூறினார். இதற்கு முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்யக் கோரி போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் உடனே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மதரஸாக்களை கண்காணிக்கும் உத்தரவு
இது ஒருபுறம் இருக்க, உத்தரபிரதேசத்தில் உள்ள முஸ்லிம் குழந்தைகளின் கல்வி நிலையமான மதரஸாக்களை கண்காணிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் மதரஸாக்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால் மதரஸாக்களை இடிக்கிறோம் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில், உத்தரபிரதேச அரசும் தற்போது மதரஸாக்களை கண்காணிக்க உத்தரவிட்டிருப்பது முஸ்லிம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

'மசூதிகளை அப்புறப்படுத்துங்கள்'
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் சஞ்சய் நிஷத், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "உத்தரபிரதேசத்தில் இந்து கோயில்களுக்கு அருகில் மசூதி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அந்த மசூதிகளை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் அமைக்க வேண்டும். இப்போது அயோத்தியில் ராமர் கோயில் எந்த இடையூறும் இன்றி கட்டப்படுகிறது. அதன் அருகே இருந்த மசூதி வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதுதான் நல்லது. நாங்கள் (இந்துக்கள்) எங்கள் கோயில்களை வேறு எங்கும் கொண்டு செல்ல மாட்டோம். மற்ற மதத்தினர் தங்கள் வழிபாட்டு தலங்களை எங்கு வேண்டுமோ கட்டிக் கொள்ளலாம்" என்றார்.

'தீவிரவாதிகளுடன் தொடர்பு'
முன்னதாக, மதரஸாக்களை கண்காணிக்கும் உத்தரவு தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சஞ்சய் நிஷத், "மதரஸாக்களை கண்காணிக்கும் உத்தரவை நான் வரவேற்கிறேன். தீவிரவாதிகளுக்கும், கிரிமினல்களுக்கும் உத்தரபிரதேசத்தில் உள்ள மதரஸாக்களுடன் தொடர்பு இருக்கிறது. எனவே, மதரஸாக்களை கண்காணிக்க வேண்டியது அவசியம்" என்றார்.
மேலும், உத்தரபிரதேசத்தை கலவரம் இல்லாத மாநிலமாக மாற்றியதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சஞ்சய் நிஷத் கூறினார்.












Click it and Unblock the Notifications