பரபரக்கும் உ.பி அரசியல் களம்.. ''குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்''.. யாரை சொல்கிறார் முதல்வர் யோகி!
லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி காத்திருக்கிறது. உ.பி.யில் அதியசம் நிகழ்த்த வேண்டும் என்று காங்கிரசும் தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளது.

அகிலேஷ் யாதவின் உதவியாளர்
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் உதவியாளரான ராஜீவ் ராய் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். .வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் கண்டனம்
தனது உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதற்கு அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த ரெய்டுகள் அனைத்தும் தேர்தலில் பாஜக தோற்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாகும் என்று கூறிய அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டினார்.

யோகி ஆதித்யநாத்
இப்போது வருமான வரித்துறை வந்துவிட்டது; அடுத்து அமலாக்க இயக்குநரகம் வரும்; அதனை தொடர்ந்து சிபிஐ வரும் என்றும் அவர் கிண்டல் செய்தார். இந்த நிலையில் அகிலேஷ் யாதவை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மாநிலத்தில் 'விஸ்வாஸ் யாத்ரா' எனும் பேரணியை தொடங்கி வைத்து பேசிய யோகி, கூறுகையில் 'வருமான வரித்துறை சோதனையில் சமாஜ்வாடி கட்சி வேதனை அடைவதை பார்த்தேன்.

ஏன் வேதனைப்படுகிறார்கள்?
அப்போது நான் ஒரு பத்திரிகையாளரிடம் ஏன் வேதனைப்படுகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் 'குற்றமுள்ள மனசாட்சிக்கு குற்றம் சாட்டுபவர் தேவையில்லை' என்று கூறினார். குற்றமுள்ள நெஞ்சு உறுத்தத்தானே செய்யும் ஐந்தாண்டுகளில் ஒருவரது வருமானம் 200 மடங்கு வளரும் என்பதை யாரேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை இருந்திருக்குமா? இவர்கள் வாக்கு கேட்க தகுதியானவர்களா? என்று யோகி ஆதித்யநாத் பேசினார்












Click it and Unblock the Notifications