பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மிஷன் சக்தி திட்டம்! புதிய முயற்சியை முன்னெடுக்கும் உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கிராமப்புற பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கும் வகையில் மிஷன் சக்தி திட்டம் 4.0 விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது என மாநில அரசு அறிவித்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதில் ஒன்றுதான் மிஷன் சக்தி திட்டம். இந்த திட்டத்தின் 4வது பகுதி விரைவில் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச அரசு அம்மாநில பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை எளிய பெண்களுக்கான திருணத்திற்கு முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படும். இந்த திட்டத்தில் இணைய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். cmsvy.upsdc.gov.in எனும் போர்டலுக்கு சென்று விண்ணப்பம் செய்தால், மணப்பெண் எந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கிறாரோ அந்த மதத்தின் படி, மணப்பெண் குடும்பத்தின் பழக்கவழக்கப்படி திருமணம் செய்து வைக்கப்படும். திட்டத்தின் மூலம் பலன் பெற சில நிபந்தனைகள் இருக்கின்றன. அதாவது மணப்பெண்ணின் பெற்றோர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அதேபோல இந்த வரிசையில் தொடங்கப்பட்டதுதான் மிஷன் சக்தி திட்டம். பெண் குழந்தைகளின் தற்காப்புத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி, பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும், அறிவையும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 36,816 கிராம பஞ்சாயத்துகளில், 18-40 வயதுக்குட்பட்ட அரசு பெண் ஊழியர்களுக்க ஊரக வளர்ச்சி துறை மூலமாகவும், உள்ளூர் மகளிர் போலீஸ் மூலமாகவும் தற்காப்பு பயிற்சிகள் கற்பிக்கப்படும்.
இந்த திட்டம் ஏற்கெனவே 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் இதன் நான்காவது கட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications