செம.. பசுமை ஹைட்ரஜனில் புதிய புரட்சி.. மொத்தமாக மாறும் உத்தர பிரதேசம்.. யோகியின் மாஸ்டர் பிளான்!
லக்னோ: உத்தர பிரதேசத்தை மாசில்லா மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் புதிய புரட்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் என்பது பசுமை ஹைட்ரஜனில் இருந்து அமோனியா மற்றும் உரங்கள் தயாரிக்க முடியும்.

மேலும் சுத்திகரிப்பு துறைகளிலும் பசுமை ஹைட்ரஜனின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. இதுமட்டுமின்றி சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாத எரிபொருட்களை தயாரிக்க முடியும். இதனால் தான் பசுமை ஹைட்ரஜனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச மாநில பாஜக அரசு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிப்பது பற்றி கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. மேலும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையத்தை அம்மாநில அரசு அமைக்க இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.16,000 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையம் உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தின் பசுமை ஹைட்ரஜன் கொள்கை-2023க்கான வரைவு அறிக்கையை தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது வரும் 2028 ம் ஆண்டுக்குள் உத்தர பிரதேச அரசு சார்பில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி என்பது ஆண்டுக்கு 5 லட்சம் டன் என்ற அளவை அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் தற்போது பசுமை ஹைட்ரஜனின் தேவை என்பது ஆண்டுக்கு 9 லட்சம் டன்னாக இருக்கிறது. குறிப்பாக உரம் மற்றும் சுத்தகரிப்பு துறைகளில் இதன் பயன்பாடு அதிகமாகி உள்ளது. இதனால் உத்தர பிரதேச மாநிலத்துக்கு தேவையான பசுமை ஹைட்ரஜனை அங்கேயே உற்பத்தி செய்வதற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கையில் யோகி ஆதித்யநாத் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
இதன் ஒருபகுதியாக புதிதாக பசுமை ஹைட்ரஜன் ஆய்வுக்கான மையங்கள் உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ளது. மேலும் இதற்காக உத்தர பிரதேச மாநில முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் 20 நிறுவனங்களில் இருந்து ரூ2.70 டிரில்லியனுக்கும் அதிக மதிப்பில் பசுமை ஹைட்ரஜன் உட்பட புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீட்டு திட்டங்களை மாநிலம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications