நள்ளிரவு ரோந்து பணி.. தொப்பென்று இடிந்து விழுந்த பழமையான கட்டிடம்.. உடல்நசுங்கி காவலர் உயிரிழப்பு!
மதுரை: மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சக காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருபவர்கள் சரவணன் மற்றும் கண்ணன்.
Recommended Video
இவர்கள் இருவரும் நள்ளிரவு வழக்கபோல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கீழவெளி பகுதியில் இருவரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீழவெளி பகுதியில் நடமாடும் தேநீர் கடை அருகே ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். காவலர்கள் இருவரும் அங்கு இருந்தவர்களை கலைந்து செல்லும்படி கூறிக் கொண்டிருந்தனர்.

பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது
அப்போது அந்த பகுதியில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.காவலர் சரவணன் மீது அந்த கட்டிடம் விழுந்தது. இதனால் அவர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார்.
அவருடன் இருந்த காவலர் கண்ணனும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். இது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் காவலர்கள் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலரான கண்ணன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

110 ஆண்டுகள் பழமையானது
உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் தேநீர் குடிப்பதற்காக சிலர் கூடி இருந்தபோது போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் நல்லவேளையாக கூடுதல் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த கட்டிடம் 110 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

மக்கள் கோரிக்கை
மதுரை விளக்குத்தூண் பகுதியில் இது போன்ற பழைய கட்டிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கட்டிடங்களை கண்காணித்து முன்கூட்டியே அதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பெரிய விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்தது காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications