அரசு போக்குவரத்து கழகத்தில் திமுகவினர் 4,112 பேர் மாற்று வேலைகளில் இருப்பதாக வழக்கு.. ஐகோர்ட் அதிரடி
மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் என 4,112 பேர் மாற்றுப்பணியில் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் எந்த வேலையும் பார்க்கவில்லை. இவர்களுக்கான சம்பளமாக மாதந்தோறும் பெரும் தொகை செலவழிக்கப்படுகிறது. எனவே எனவே 8 கோட்டங்களிலும் டிரைவர், கண்டக்டர்களை மாற்றுப்பணி என்ற பெயரில் பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றார். இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் 8 கோட்டங்களாக செயல்படுகிறது. போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களை மாற்றுப்பணி என்ற பெயரில் வேறு பணிக்கு நியமிக்கக்கூடாது என ஒப்பந்தம் இருக்கிறது.

ஆனால் 2024-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி முந்தைய ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் என 4,112 பேர் மாற்றுப்பணியில் இருந்தது எங்களுக்கு தெரியவந்தது. இவர்கள் அனைவரும் எந்த வேலையும் பார்க்கவில்லை. இவர்களுக்கான சம்பளமாக மாதந்தோறும் பெரும் தொகை செலவழிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களால் மற்ற டிரைவர், கண்டக்டர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்த நடைமுறைக்கு எதிராக மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், டிரைவர், கண்டக்டர்களை நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. மீறினால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது.
ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் 8 கோட்டங்களிலும் தொ.மு.ச. தலைவர்கள், செயலாளர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி செய்யாமல் சலுகையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் எந்தப்பணியும் செய்யாமல் கட்சி கரை வேட்டி கட்டிக்கொண்டு வலம் வருகின்றனர். எனவே 8 கோட்டங்களிலும் டிரைவர், கண்டக்டர்களை மாற்றுப்பணி என்ற பெயரில் பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் " இவ்வாறு மனுவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்களை மாற்றுப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு அனைத்து போக்குவரத்துக்கழகங்களுக்கும் பொருந்தும். அனைத்து போக்குவரத்துக்கழகங்களிலும் டிரைவர், கண்டக்டர்களை அவர்களுக்கான பணி தவிர்த்து மாற்றுப்பணி என்ற பெயரில் அலுவலக பணிகளில் நியமிக்கக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் தொழிற்சங்கங்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை தொடரலாம்" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications