‛‛சிக்கல்’’.. மதுரையில் அதிமுக மாநாடு நடக்குமா? தடைக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு! என்ன காரணம்
மதுரை: மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக சார்பில் நடக்கும் பிரமாண்டமான மாநாட்டுக்கு தடை விதிக்ககோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அதிமுக மாநாட்டுக்கு சிக்கல் ஏற்படுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றி பொதுச்செயலாளராகி உள்ளார். ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களை எடப்பாடி பழனிச்சாமி எதிர்த்து வருகிறார். இதனால் முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் மதுரை மாவட்டத்தில் அதிமுக சார்பில் மாநாடு நடத்தி தனது செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.
இதன்மூலம் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும் அவர் தொடங்கி உள்ளார். அதன்படி வரும் 20ம் தேதி மதுரை விமான நிலையம் அமைந்துள்ள பெருங்குடி பகுதியில் அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 10 லட்சம் முதல் 15 லட்சம் பேரை திரட்ட அதிமுகவினர் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கான பணிகள் 65 ஏக்கரில் நடைபெற்று வருகிறது. மாநாடு வரும் அனைவருக்கும் உணவு வழங்க சமையலறை, உணவு வினியோக மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் வகையிலும், மாநாட்டுக்கு அனைவரும் வர வேண்டும் என்பதை கூறும் வகையிலும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மதுரை அதிமுக மாநாடு நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு முக்கிய காரணம் என்பது மதுரையில் 20ம் தேதி நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடைக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருப்பது தான். இந்த மனுவை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‛‛மதுரை விமான நிலையம் அமைந்துள்ள பெருங்குடி பகுதியில் வரும் 20ம் தேதி அதிமுக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த இடம் விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தினமும் ஏராளமான விமானங்கள் இங்கு வந்து செல்கின்றன. இந்த பகுதியில் விமானங்கள் மிகவும் தாழ்வாகவே பறந்து செல்கின்றன. ஆனால் விமான நிலைய அதிகாரிகளிடம் தடையின்மை சான்று பெறவில்லை.

இந்த மாநாட்டுக்கு 15 லட்சம் பேர் கூட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட்டாசு வெடிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பட்டாசு வெடிக்க தடைப்பட்ட பகுதியாக உள்ள நிலையில் இந்த மாநாடு நடக்கிறது. பொதுவாக விமான நிலையத்தை சுற்றி 20 கிலோமீட்டர் தொலைவுக்கு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் விளம்பர பலகை கூட வைக்க முடியாது.
இத்தகைய சூழலில் மாநாடு ஏற்பாடு நடக்கிறது. மேலும் இந்த மாநாட்டால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications