இந்தி தெரியலனா வெளிய போகனுமா? நான் நாட்டைவிட்டே போக ரெடி, ஆனால்.. ஆவேசமான அமீர்
மதுரை : இந்தி திணிப்புக்கு எதிராக திரைத்துறையினர் அடுத்தடுத்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தி தெரியாத மக்கள் வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள், நாட்டை விட்டு வெளியேற தயார் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்களை தாண்டி தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்தி திணிப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இந்திப்பு திணிப்புக்கு எதிராகவும், சுகாசினி மணிரத்ணம் உள்ளிட்டோர் ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
ஆனாலும் நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரபலமும் இந்தி விவகாரத்தில் கருத்து தெரிவிப்பதும், அதற்கு மற்றொருவர் எதிர் கருத்து தெரிவிப்பது என தற்போதைக்கு இந்த விவகாரம் ஓயாது போல தெரிகிறது.

இயக்குனர் அமீர்
இந்த நிலையில் தான் இந்தியை எதிர்க்கும் பிரபலங்கள் பட்டியலில் பிரபல இயக்குனரும், தற்போது சில படங்களில் நடித்து வருபவருமான அமீர் இணைந்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக திரைத்துறையினர் அடுத்தடுத்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தி தெரியாத மக்கள் வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள், நாட்டை விட்டு வெளியேற தயார் என அவர் கூறியுள்ளது இந்தி திணிப்பு விவகாரத்தை மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நாட்டிலிருந்து வெளியேற தயார்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழக மக்கள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்தி தெரியாத மக்கள் வெளியேற வேண்டும் எனச் சொல்கிறார்கள். நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தயார். ஆனால், எது நாடு, யார், யார் இன மக்கள் என முதலில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்தி திணிப்பு பாசிசம்
இந்தி பேச வேண்டும் என சொல்வது தான் பாசிசம். மொழி, இன வெறி இருக்கக்கூடாது, பற்று இருக்க வேண்டும். தமிழ் மக்களை தமிழ் இசையோடு வைத்தவர் இளையராஜா, ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஏ.ஆர்.ரகுமானை கொண்டாடியது. சினிமாவில் ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் புகழ்பெற்றதால் அவர் மும்பையில் விரட்டப்பட்டார், பாஜக சினிமா கலைஞர்களை வைத்து இந்தியை வளர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது

வாய்ப்பு பறிபோகும்
தமிழ் கலைஞர்கள் வெளி மாநிலங்களில் தமிழ் குறித்து பேசுவதில்லை, சினிமா வாய்ப்பு பறிபோகும் நிலை வரும் என அச்சம்தான் அதற்கு காரணம். தமிழ் கலைஞர்களில் உச்சத்தில் உள்ள சிலர் சுயநலத்துடன் செயல்படுகிறார்கள். எனினும் மண்ணுக்காக, மக்களுக்காக சில நடிகர்கள் போராடி வருகின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications