கோகுல்ராஜ் கொலை..உங்களையே உங்களுக்கு தெரியலையா?..கேட்ட நீதிபதிகள்..கதறிய சுவாதிக்கு கடைசி வாய்ப்பு
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் வாக்குமூலம் அளித்த சுவாதி கண்ணீர் விட்டு கதறினார். உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா? என்று சுவாதியை கேட்க நீதிபதிகள், உண்மையை சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறவே, கதறி அழுதார் சுவாதி. கடைசி வாய்ப்பாக புதன்கிழமை வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது, அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற இளம்பெண்ணை காதலித்தார். கடந்த 23.6.2015ல் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் சிபிசிஐடி போலீசார், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் இருவர் இறந்து போக யுவராஜ் உட்பட 15 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து கடந்த 8.5.2019ல் மதுரை மாவட்டவன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஆயுள் தண்டனை
கோகுல் ராஜ் கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் யுவராஜ், டிரைவர் அருண் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தனர். கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது.

சுவாதியை ஆஜர் படுத்த உத்தரவு
இந்த மனுக்களை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை; இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சி பிறழ் சாட்சியாக மாறியது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து விசாரணை நடைபெற்றது.

சிசிடிவி காட்சிகள்
இன்று காலை விசாரணை நடைபெற்ற போது சாட்சி கூண்டில் சுவாதி நிறுத்தப்பட்டிருந்தார். அதற்கு அருகே வைக்கப்பட்டிருந்த டிவியில் 23.6.2015ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி திரையிடப்பட்டது. அந்த திரையில் கோகுல் ராஜூம் சுவாதியும் கோவிலில் இருந்து உள்ளே வருவது, வெளியே வருவது மற்றும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கக்கூடிய காட்சிகள் திரையிடப்பட்டது. அப்போது சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

அது நான் இல்லை
அதற்கு அழுதபடியே அந்த படத்தில் தெரிவது நான் இல்லை என சுவாதி கூறினார். இவ்வளவு பெரிய திரையில் உங்கள் படம் தெளிவாக தெரிகிறது. ஆனால் நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள், உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் உண்மையை சொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இவ்வளவு பெரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளீர்கள். எனவே உண்மையை சொன்னால் நன்றாக இருக்கும்.

எனக்கு எதுவும் தெரியாது
பொய் சொன்னால் தொடர்ந்து உங்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள நேரிடும் என சுவாதியை நீதிபதிகள் எச்சரித்தனர். மீண்டும் மீண்டும் திரையில் அந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து சுவாதி மறுப்பு தெரிவித்து வருகிறார். சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜூடன் செல்வது நான் இல்லை. கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

கண்ணீர் விட்டு கதறல்
சுவாதியின் வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதிகள், கோர்ட்டில் உண்மையை மறைப்பதும் அவமதிப்புதான் என்று கூறினர். உங்கள் புகைப்படம் உங்களுக்கே தெரியவில்லையா அது நீங்கள் இல்லை என்று கூறுவதை எப்படி ஏற்பது என சுவாதியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாதி கண்ணீர் மல்க அது யார் எனக்கு தெரியாது அது நான் இல்லை என்று கூறினார். வாழ்க்கையில் நியாயம், தர்மம், சத்தியம் முக்கியம் என நீதிபதிகள் கூறினர். திரும்ப திரும்ப அது நான் இல்லை என்றே சுவாதி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடைசி வாய்ப்பு
நீதிமன்றம் விளையாட்டு மைதானமா என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை புதன்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடைசி வாய்ப்பாக புதன்கிழமை வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது, அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications