லண்டனுக்கு பறக்க டிக்கெட் போட்ட அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ! யாரை சந்திக்க இந்தப் பயணம்?
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு லண்டன் புறப்பட்டுச் செல்ல டிக்கெட் போட்டிருக்கிறாராம்.
செல்லூர் ராஜூவின் இந்த லண்டன் பயணம் எதற்காக, யாரை சந்திக்க என அதிமுக மேலிடம் கண்கொத்தி பாம்பாக கவனிக்க தொடங்கியிருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூவை பொறுத்தவரை பார்ப்பதற்கு தான் வேடிக்கையான மனிதர். ஆனால் ஆளு பயங்கர உஷாரானவர். சிரித்துக் கொண்டே போகிற போக்கில் பெரிய மெசேஜை பிரஸ்மீட்டில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார். இப்படித்தான் தனித்து போட்டியிட நாங்க ரெடி நீங்க ரெடியா என ஒரு வருடத்திற்கு முன்பே பாஜகவை சீண்டி கூட்டணி விரிசலுக்கு அச்சாரம் போட்டார்.
அதேபோல் நடிகர் விஜய்க்கு என்ன குறை என்றும் எவனவனோ முதலமைச்சராவேன் என சொல்லும் போது அவர் ஏன் வரக்கூடாது? எனப் பேசி விஜய் ஆதரவாளர்களின் அப்ளாசை அள்ளினார். சில சமயங்களில் இவர் பேசுவத் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த தர்ம சங்கடமான சூழலை உருவாக்கிவிடும். அதிமுகவில் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி போன்றோர் வாயை திறந்தாலே அவர்கள் சொல்லும் கருத்துக்கள் வைரல் கண்டெண்ட்கள் ஆகும்.
தீபாவளி தருணத்தில் தனது மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்ததால் தீபாவளி கொண்டாடுவதை கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார் செல்லூர் ராஜூ. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி முடிந்ததும் இவர் லண்டன் புறப்பட்டுச் செல்வதற்கான காரணம் என்ன எனத் தெரியாமல் லோக்கல் அதிமுக நிர்வாகிகளே குழம்பிப் போய் உள்ளனர். இந்தப் பயணமானது முழுக்க முழுக்க செல்லூர் ரஜுவின் தனிப்பட்ட பயணம் என்பதால் அதிமுக மேலிடமும் அவரது ஒவ்வொரு அசைவுகளையும், குறிப்பாக லண்டன் பயணத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறது.
இதனிடையே செல்லூர் ராஜூ தனது லண்டன் பயணத்தை பற்றி தன்னுடன் இருப்பவர்களுக்கே பெரிதாக எந்த தகவலும் சொல்லவில்லை என்றும் மதுரை மாநகர அதிமுகவினர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications