மதுரை ஐடிஐ மாணவரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்து ராகிங்.. 3 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு
மதுரை: மதுரை ஐடிஐ மாணவரை நிர்வாணப்படுத்தி, விடுதி அறையில் வைத்து அடித்து உதைத்து ராகிங் சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் மற்றும் விடுதியின் வார்டன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில் அரசு கள்ளர் பள்ளி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பள்ளி மாணவர்கள், அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் என 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

இடைநின்ற மாணவர்கள்
பள்ளியில் படிக்க முடியாமல் பாதியில் இடைநின்ற 4 மாணவர்களை, செக்கானூரணி ஐடிஐயில் செப்டம்பர் 11 ஆம் தேதி ஐடிஐ முதல்வர் சேர்த்துவிட்டுள்ளார். மதுரை கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 1 மாணவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள், மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் செக்கானூரணி அரசு மாணவர் விடுதியில் உள்ள ஒரே அறையில் தங்கிப் படிக்க ஐடிஐ முதல்வர் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளனர்.
நிர்வாணப்படுத்தி ராகிங்
இந்நிலையில், முதலாம் ஆண்டு படித்து வந்த 15 வயது மாணவரை உடன் படிக்கும் 17 வயது மாணவர்கள் ஆடையைக் கழற்றி நிர்வாணப்படுத்தி, கேலி செய்து அடித்து உதைத்து ராகிங் செய்துள்ளனர். இதனை அறையில் இருந்து மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையிடம் காண்பித்துள்ளார். இதற்கிடையே இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கியது.
சிறுவனின் தந்தை புகார்
இச்சம்பவம் தொடர்பாக ராகிங் செய்யப்பட்ட சிறுவனின் தந்தை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராகிங் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மாணவனை சக மாணவர்கள் ஆடையை கழற்றி நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வழக்குப் பதிவு
இச்சம்பவம் தொடர்பாக 3 சிறார்கள் மீது ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர் விடுதி பாதுகாவலர் பாலமுருகன் கவனக் குறைவாக செயல்பட்டதாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு மாணவர்கள் விடுதியில் மாணவர் நிர்வாணப்படுத்தப்பட்டு அடித்து உதைத்து ராகிங் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications