குலசை தசரா திருவிழா..சினிமா,டிவி நடிகர்கள் பங்கேற்கலாம்..ஆபாச நடனங்களுக்கு ஹைகோர்ட் தடை
மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா நிகழ்ச்சியில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. தசரா திருவிழா ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் அனைத்தயும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உலக பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. வடமாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இந்த கோயிலில்தான் தசரா திருவிழா நடைபெறுகிறது. இதனால் இந்த திருவிழாவை ஒட்டு மொத்த தமிழ்நாடும் கொண்டாடுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு குலசை தசரா வெகு விமரிசையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸுக்கே சவால் விடும் குலசை ராக்கெட் ஏவுதளம்! கனிமொழி - மயில்சாமி சந்திப்பு

10 நாட்கள் திருவிழா
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம், அடுத்த மாதம் 5ஆம் தேதி நள்ளிரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது. இதையொட்டி, உற்சவர் ஸ்ரீ முத்தாரம்மனுக்கு காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு செப்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தசரா திருவிழா தொடங்கியது.

முத்தாரம்மன்
10 நாட்களும் இரவு 10 மணிக்கு மேல் முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அம்மன் வீதியுலாவுடன் விரதமிருக்கும் பக்தர்களும் பல்வேறு வேடமணிந்து வீதியுலா சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர். அக்டோபர் 5ஆம் தேதியன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

ஆபாச நடனங்களுக்கு தடை
இந்த விழாவில் பாடல்களுக்கு நடனமாடுவதற்கு தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட தடை விதித்து உத்தரவிட்டனர்.

சினிமா நடிகர்கள் பங்கேற்க அனுமதி
இதனிடையே இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, குலசை தசரா திருவிழா நிகழ்ச்சியில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. தசரா திருவிழா ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் அனைத்தயும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.

அபராதம் விதிக்கலாம்
தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆட அனுமதி இல்லை என்றும் ஆபாச நடனங்கள் இடம்பெற்றால் சினிமா நடிகர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் அபராதம் விதிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்வதற்கான கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.